வடக்கு விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழர்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பிரதமரின் கருத்து தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் மௌனமாக இருப்பதாக, அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ரணில், பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இக்கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், “முன்னர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர், எங்கள் பிள்ளைகள் ரகசிய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், தன்னை பதவியில் அமர்த்தினால் அந்த முகாம்களை இனம்கண்டு அவர்களை விடுவிப்பேன் என கூறியிருந்தார்.
எமக்கு தீர்வு பெற்று தருவதாக கூறிய ரணில் பதவியில் ஏறியதும், பலாலியில் வைத்து எமது மண்ணில் உங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் உயிரோடு இல்லை என தெரிவித்திருந்தார்.
இவ்வாறு கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்பொழுது மறப்போம் மன்னிப்போம் என கூறுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்” என தெரிவித்துள்ளனர்.