“வடக்கில் மீண்டும் ஒருபோதும் ஆயுதப்போராட்டம் உருவாகாது. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் ஆயுதப் போராட்டம் உருவாகலாம்” – இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதான கொரடாவுமான அநுரகுமார திஸாநாயக்க.
மேலும் புலிகளின் ஆயுதக் கொள்வனவு தொடர்பில் கே.பியை பகிரங்க நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த
அவர், மேலும் கூறுகையில், “இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் எத்தனைபேர் இறந்தனர் என்று எமக்குத் தெரியாது. எவ்வளவு சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டது என்பதும் தெரியாது. இவற்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
யுத்தத்தில் சட்டம் பாதுகாக்கப்பட்டது, அரசமைப்பு பாதுகாக்கப்பட்டது, மனிதாபிமானம் பாதுகாக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது. யுத்தத்தில் என்ன நடந்தது என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். வடக்கிலுள்ள தாய்மார்கள் இதைத்தான் கேட்கின்றனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது, கணவர், சகோதரன் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றே அவர்கள் கேட்கின்றனர்.
யுத்தத்தில் நாம் எதிர்பாராதது நடக்கும். ஆனால், என்ன நடந்தது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதை மூடிமறைக்க முடியாது. எவர் மூடிமறைக்க முயற்சித்தாலும் அதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். உண்மை கண்டறியப்படவேண்டும்.
இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தாய்மார்கள் உங்களை உயர ஏந்தியவாறு தமது பிள்ளை, கணவர், சகோதரர்களை மீட்டுத்தருமாறு கேட்கின்றனர். அந்த உரிமை அவர்களுக்கு உள்ளது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ளும் உரிமை உள்ளது.
எனவே, யுத்தத்தின்போது என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளவேண்டும். என்ன நடந்தது என்று தெரியாவிட்டால், இந்த மக்களுக்கு நீங்கள் அதையே மீண்டும் செய்கிறீர்கள். இது எமக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் உண்மை கண்டறியப்படவேண்டும் என நாம் கூறுகின்றோம். இந்த உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது உண்மையைக் கண்டறிவதாக மட்டுமே இருக்கவேண்டும். தண்டிக்கும் பொறிமுறையாக இருக்கக்கூடாது. எமது நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கை இல்லை. எமக்கும் இந்த நீதிமன்றக் கட்டமைப்பில் நம்பிக்கை இல்லை.
அதனால் இந்த விடயத்தில் நாம் சிறந்த நீதிமன்றக் கட்டமைப்பை எமது நாட்டுக்குள் நிறுவி நடவடிக்கை எடுக்கவேண்டும். எமது நாட்டின் பிரச்சினையை இந்தியாவோ, அமெரிக்காவோ, ஐ.நாவோ தீர்க்காது. எமது பிரச்சினையை இந்த நாடுகளும், ஐ.நாவும் தீர்க்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறதா? இவை அனைத்தும் தமது நலனைக் கருத்திற்கொண்டே செயற்படும். தமிழ் மக்களின் பிரச்சினையை இந்தியா ஒருபோதும் தீர்க்காது.
இன்று இந்திய றோ உளவுப்பிரிவின் உளவு சேவையாக யாழ்ப்பாணம் உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஸ்திரத்தன்மை இல்லாது செய்ய றோ உளவுப்பிரிவு நடவடிக்கை எடுக்கிறது. இந்தியாவோ வடக்கில் அரசியல் முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. புதிய அரசைக் கட்டியெழுப்புகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதைப் பற்றி இங்கு கூறுவார்களா என்று தெரியவில்லை.
இவ்வாறான நிலையில் தமிழரின் பிரச்சினையை இந்தியா தீர்க்காது. பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நீடிப்பிலுள்ளது. இதை நீக்க இந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெலிக்கட சிறையிலுள்ள ஒரு கைதியை நான் சந்தித்தேன். எதற்காக நீங்கள் கைதுசெய்யப்பட்டுள்ளீர்கள் என்று கேட்டேன். புலிகளின் அடையாள அட்டையை வைத்திருந்ததற்காக கைதுசெய்யப்பட்டேன் என்று அவர் கூறினார்.
அந்த அடையாள அட்டையில் கையெழுத்திட்டிருப்பவர் யார் என்று நான் கேட்டேன். தயா மாஸ்டர் என்று அவர் கூறினார். அடையாள அட்டையில் கைச்சாத்திட்டவர் வெளியே இருக்கிறார். அதை வைத்திருந்தவர் உள்ளே இருக்கிறார். தயா மாஸ்டர், கே.பி. போன்றோர்களிடம் பணம், கப்பல், வங்கிக்கணக்கு என்பன இருந்தும் அவர்கள் வெளியே இருக்கின்றனர்.
இவையெல்லாம் இல்லாதவர்கள் உள்ளே இருக்கின்றனர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு தொடர்பில் பகிரங்க நீதிமன்றத்தின் ஊடாக கே.பியிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டும். அதுமட்டுமன்றி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்” – என்றார்.