சராஹா எனும் செயலி கடந்த சில வாரங்களில்உலகமுழுவதும் அதிக பிரபலமாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் உள்ள நண்பர்களுக்கு மொட்டைக் கடுதாசி போன்று தகவல்களை சராஹா மூலம் அனுப்ப முடியும். இதில் குறுந்தகவலை அனுப்புபவர் யார் என்ற தகவல் குறுந்தகவல் பெறுபவருக்கு தெரியாது.
எனினும் சராஹா செயலியில் யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் என்ற தகவலை இதனை உருவாக்கியவரகள் தெரியப்படுத்தப்போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. உண்மையில் சராஹா இந்த தகவல்களை வெளியிடுமா என்ற கேள்வி இணையவாசிகளின் மனக்குரலாக இருக்கும் நிலையில், சராஹா செயலியை உருவாக்கிய சைன்அலாப்தின் தௌஃபிக் ‘ஆம்’ என்ற அதிர்ச்சி தகவலை பதிலாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
‘சராஹா செயலி நமக்கு அறிமுகமானவர்களிடம் உண்மையை தெரிவித்து, அவர்களிடம் ஆக்கப்பூர்வமான தகவல்களை தெரிவிக்கவே உருவாக்கினோம். எல்லாவற்றையும் நேரடியாக மற்றவர்களிடம் தெரிவிக்க முடியாது என்பதால் மெசேஜ் அனுப்பியது யார் என்ற தகவல்களை மறைத்தோம். எனினும் மக்கள் இதனை சரியான நோக்கத்தில் பயன்படுத்துவதாய் தெரியவில்லை.’
‘சராஹா செயலியை பயன்படுத்தி மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது மிரட்டுவது போன்ற தகவல்கள் பரிமாறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறுந்தகவலை யார் அனுப்பியது என்ற தகவல் தெரியாது என்ற அம்சத்தை நன்கு பயன்படுத்தி மற்றவர்களை மிரட்டுவதும், அச்சமூட்டும் செயல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தொடர்ச்சியான கமென்ட்கள் சராஹா செயலியில் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோன்ற அச்சுறுத்தல்கள் செயலியில் வருவது குறித்து அதன் பயனாளிகள் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், சராஹா செயலி மிகுந்த கடுமையான விதிமுறைகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் தொடர்ந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எனினும் இது ஒருகட்டம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.’
சராஹா செயலியின் விதிமுறைகளில், ‘சராஹா வாடிக்கையாளர்களின் அடையாளத்தை அவர்களின் அனுமதியின்றி யாருக்கும் தெரியப்படுத்தாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ‘சராஹா விதிமுறைகளை மீறும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஒருபோதும் ரகசியமாக வைக்கப்படாது.’ என தௌஃபிக் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் போன்று சராஹா செயலி என்க்ரிப்ட் செய்யப்படவில்லை, இதனால் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் எக்காரணத்தை கொண்டும் மற்றவர்களுக்கு தெரியாது. ஆனால் இதேநிலை சராஹா செயலிக்கு பொருந்தாது. இதனால் சராஹா செயலியின் விதிமுறைகளை மீறும்பட்சத்தில் தவறான குறுந்தகவல் அனுப்புவோர் விரைவில் பிடிபடுவர்.