பிரகாஷ்ராஜ் என்ற ஒரு நடிகனின் மறுபக்கம்

சொந்த வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருந்தாலும், பொது வெளியில் அவரது நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பது முக்கியமானது.

நடிகர் பிரகாஷ்ராஜ் பற்றி ஆயிரம் செய்திகள், வதந்திகள் இருந்தாலும், அவர் எந்த அளவு சிறந்த மனிதன் என்பதை நாம் அறிந்து கொள்ள நிறைய உதாரணங்கள் உள்ளன…

prakash-raj

உதாரணம் ஒன்று…

விஜய் நடித்த ‘திருமலை’, ‘ஆதி’, தனுஷ் நடித்த ‘சுள்ளான்’ படங்களை இயக்கியவர் ரமணா. அவருக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டபோது, தோள் கொடுத்து உதவியவர் பிரகாஷ்ராஜ். அது என்னென்ன வகையான உதவி என்பதை பட்டியல் போடக்கூடாது என்று, தகவல் சொன்ன ஒருவர் உறுதிமொழி வாங்கிக்கொண்டதால் முழுமையாக சொல்ல முடியவில்லை.

இன்று ரமணா, தனது புற்றுநோயிலிருந்து மீ்ண்டு வந்து அடுத்த படத்தை இயக்குவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார் என்றால் அதன் பின்னணியில் பிரகாஷ்ராஜும் இருக்கிறார். கண்டிப்பாக ரமணா மீண்டும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும்.

இன்னும் சில உதாரணங்கள்..

தன்னிடம் பணியாற்றிய காஸ்டியூம் உதவியாளர் ஒருவரை, தனி காஸ்டியூமராக உயர்த்தி அழகு பார்த்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

ஆபீஸ் பாயாக இருந்த ஒருவரை, இப்போது தயாரிப்பு நிர்வாகியாகப் பதவி உயர்த்தி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பே, தன்னிடம் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவரவர் எங்கு விரும்புகிறாரோ அல்லது அவரவருக்கு எந்த இடத்தில் வசதியாக இருக்குமோ, அங்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

முதலில் அந்த வீட்டுக்கு ஒரு அட்வான்ஸ் தொகையை செலுத்துவார். பிறகு மாதாமாதம் தவணை முறையில் எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமோ, அதற்கு பிரகாஷ்ராஜின் அலுவலகத்தில் இருந்து காசோலைகள் பறக்கும்.

தவிர, தன்னை நாடிவரும் சினிமா நட்சத்திரங்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை மறைமுகமாக செய்துவரும் அவர், சில வருடங்களுக்கு முன், சாலிகிராமத்தில் வசித்த ஒரு பிரீலான்ஸ் பத்திரிகையாளரின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

‘பிரகாஷ்ராஜ் எல்லாம் எங்க வீட்டுக்கு வருவாரா?’ என்று அந்த பத்திரிகையாளர் ஒரு நாள் கேட்டதன் விளைவு, நள்ளிரவில் அந்த நபரின் வீட்டுக்கு வந்து அசத்திவிட்டார். அத்துடன் விடவில்லை, அந்த பத்திரிகையாளரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, சாப்பாடு போட்டு திக்குமுக்காடச் செய்துவிட்டார்.

அந்த பத்திரிகையாளருக்கு இன்னும் பிரகாஷ்ராஜ் மீதான பிரமிப்பு விலகவில்லை.

பிரகாஷ்ராஜ் என்ற ஒரு சிறந்த நடிகனின் மறுபக்கம் இது!

Related Posts