யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளன.
குறிப்பாக, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு போதைப்பொருளை எடுத்துச் சென்ற ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்த பொலிஸார், நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சந்தேகநபரிடம் 170 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த நிலையில், அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறைக்கைதி ஒருவரை பார்க்கச் சென்ற பெண் ஒருவர், பிட்டுக்குள் கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டார்.
அதேபோன்று கடந்த 12ஆம் திகதி, கோழிக் குழம்பினுள் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்துவைத்து கடத்த முற்பட்ட ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ். சிறைச்சாலையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் விநியோகம் காரணமாக, பொலிஸார் தற்போது தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, பார்வையாளர்களாக செல்பவர்கள், கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.