சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் சட்டத்தரணியாக இருப்பது மிகவும் அவமானத்துக்கு உரிய விடயம். வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளோம். சட்டமில்லாத நாட்டில் சட்டத்தரணி இவர் என்று கூறக்கூடிய நிலையில் நான் உங்கள் முன் நிற்கின்றேன்.
காணாமல் போனவர்கள் என்ற பிரச்சினை கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் இருக்கவில்லை. ஆனால் இன்று நவீனகாலத்தில் தான் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்களே அவர்களைப் பிடித்து தடுத்து வைத்து அல்லது கொலை செய்துவிட்டு தெரியாது என கைவிரிக்கின்றனர்.
இன்று இலங்கையில் இது மிகப்பெரிய பிரச்சினை . எந்த ஆட்சியாளர்கள் அவர்களை பிடித்துச் சென்றார்களோ அவர்களிடம் சென்று நீதி கேட்டால் நீதி கிடைப்பது என்பது முடியாத விடயம். ஆகவே இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே ஆட்சியில் தொடர்ந்தும் இருந்தால் எப்படி எமது உறவுகளை கண்டு பிடித்து தருவார்கள்?
ஆனால் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று அவர்களுக்கு தெரியும் . ஆளும் அரசு நினைத்தால் இன்றே தடுத்து வைத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்ய முடியும் என்றார்.