அமீர் கான் நடிப்பில் வெளியான பிகே இந்திய சினிமா சரித்திரத்தில் மிக அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது.
ராஜ்குமார் ஹிரானி பிகேயை இயக்கியிருந்தார். வேற்றுக்கிரகவாசியான அமீர் கான், இந்தியாவிலுள்ள மத மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்பதாக பிகே உருவாக்கப்பட்டிருந்தது.
எதிர்ப்பையும், வழக்கையும் சந்தித்த இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜெமினி புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. கமல் அமீர் கான் நடித்த வேடத்தில் நடிப்பார் என தெரிகிறது. இதற்குமுன் ராஜ்குமார் ஹிரானியின் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் – வசூல்ராஜா எம்பிபிஎஸ் – கமல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. மேலும், பிகே ரீமேக்கில் கமல் நடிப்பார் என ஜெமினி புரொடக்ஷன்ஸ் தகவல் கூறியுள்ளதே தவிர, கமல் இன்னும் அதனை உறுதி செய்யவில்லை.
கடைசியாக அவர் நடித்துள்ள பாபநாசம் படமும் மலையாள ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.