பார்வையாளர்களை விட நோயாளர்களே எங்களுக்கு முக்கியம் எனவே ‘பாஸ்’ முறையில் தளர்வு ஏற்படுத்தப்பட மாட்டாது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராசா தெரிவித்தார்.
விபத்துக்கு உள்ளாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக சென்று பார்க்க ‘பாஸ்’ நடைமுறையால் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
எனவே தளர்வினை மேற்கொள்ளுமாறு யாழ். மாகர சபை உறுப்பினர்கள் பிரதிப் பணிப்பாளரிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்தனர்.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நோயாளியை பார்க்க அதிகமானவர்கள் வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் என எடுத்து வருகின்றனர். இதனைக் சாப்பிட்டு விட்டு அதன் கழிவுகளை ஆங்காங்கே போடுகின்றனர்.
இதனால் வைத்தியசாலை வளம் பாதிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையின் வளத்தை பேண வேண்டியவர்களான நாங்கள் இருக்கின்றோம். இதற்கும் மேலாக தொற்று நோய்களை குறைக்கும் நோக்கத்துடன் வைத்தியசாலையினர் செயற்பட்டு வருகின்றனர்.
குழந்தைகள் விடுதி மற்றும் மகப்பேற்று விடுதி என்பனவற்றில் தற்போது தொற்றுநோய் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே நாம் நோயாளர்களை நோய்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம்.
எமக்கு பார்வையாளர்களை விட நோயாளர்களே முக்கியம். தற்போது பார்வையாளர்களுக்கு 3 ‘பாஸ்’ வீதம் வழங்கப்பட்டுள்ளது.
அதனைக் கொண்டு தான் வைத்தியசாலைக்குள் நுழைய முடியும். இந்த நடைமுறை தான் தென்னிலங்கையிலும் உள்ளது.
எனினும் தேவை ஏற்படுகின்ற போது உள் செல்வதற்கான அனுமதிகள் வழங்கப்படும். ஆனால் ‘பாஸ்’ நடைமுறையில் தளர்வு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.