பால்மாவின் விலை அதிகரிக்கும்?

பெறுமதி சேர் வரித் (வற்) திருத்தத்துக்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை, நூறு ரூபாயினால் அதிகரிக்கப்படக்கூடும் என்று, பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை காலமும், பால்மாவுக்கு “வற்” அறவிடப்படவில்லை. ஆனால், கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வற் திருத்தத்துக்கமைய, பால்மாவுக்கும் இந்த வரி விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று, மேற்படி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோகிராம் பால் மாவுக்காக, தற்போது 725 ரூபாயெனும் நிர்ணய விலையொன்று காணப்படுகின்றது. இந்நிலையில், மேலும் 15 சதவீத வரி விதிக்கப்படுமாயின், தாங்கள் பாரிய நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், மேற்படி இறக்குமதியாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவை, அடுத்த வாரமளவில் சந்தித்துக் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக, இலங்கையின் முன்னணி பால்மா இறக்குமதியாளரொருவர் தெரிவித்தார்.

திரவப் பாலுக்கான வரி விதிப்பொன்று காணப்படாமை தொடர்பில், தாங்கள் மகிழ்சியுறுவதாகவும், மேற்படி பால்மா இறக்குமதியாளர்கள், மேலும் தெரிவித்தனர்.

அரச நிதிக்கொள்கைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கே.​கே.ஐ.எரந்த, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் ​மாநாடொன்றின் போது, சீன் உள்ளிட்ட அனைத்துப் பால்மாக்களுக்கும் வற் அறவிடப்படும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts