போரால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான இந்திய வீட்டுத் திட்ட உதவியை வழங்குவதற்கு பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் திட்டத்தின் கீழான பயனாளிப் பெண் ஒருவரிடம் இருந்து பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் அந்தப் பெண் நேரடியாக முறையீடு செய்திருக்கிறார்.
இந்திய வீட்டுத் திட்டத்தை வடக்கில் செயற்படுத்தும் ஒரு பங்காளியாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளது. திட்டத்தை நடைமுறைப் படுத்துபவர்களாகச் சங்கத்தின் கொழும்பு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளே உள்ளனர் என்று உள்ளூரைச் சேர்ந்த சங்க உறுப்பினர்கள் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தனர்.முழங்காவில் பகுதிகளில் இந்திய வீட்டுத் திட்டப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்கின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் கட்டம் கட்டமாகவே நிதி விடுவிக்கப்படும். முதற்கட்ட நிதிக்கான வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டதும் அடுத்த கட்டம் விடுவிக்கப்படும்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க கொழும்பு அதிகாரிகளே நிதி விடுவிப்புக்கான அனுமதியை வழங்குபவர்கள். அவர்களில் இருவரே, நிதியை விடுவிப்பதற்காகப் பாலியல் லஞ்சம் கோரினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமும் கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட விசேட அலுவலகமும் விசாரணைகளை மேற்கொண் டன. இதன்போது பாலியல் லஞ்சம் தொடர்பான பல சம்பவங்கள் இனங்காணப்பட்டுள்ளன என்று உதயன் பத்திரிகைக்கு அறிய வந்தது.
கணவனை இழந்த பெண் ஒருவரே இது குறித்து துணிந்து முறைப்பாடு செய்துள்ளார். எனினும் வேறு பலரிடமும் இவ்வாறே பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது என்றும் சிலர் அந்தக் கோரிக்கைக்கு இணங்கிச் சென்றுள்ளனர் என அறியப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
“”விடுமுறை நாளில் அவர் குறிப்பிடும் இடத்துக்குச் சென்று மேலதிகாரியைச் சந்தித்தீர்களானால் இலகுவில் நிதியை விடுவித்துவிடலாம்” என்று தொழில்நுட்ப அலுவலர் ஒருவர் குறித்த விதவைப் பெண்ணிடம் தெரிவித்திருக்கிறார் என்று உதயன் பத்திரிகை அறிந்தது.
அதேசமயத்தில், வீட்டுத்திட்டப் பயனாளிகளான பெண்களுக்கு பணத்தை உரிய காலத்தில் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள் எனவும், பணத்தைக் கேட்டால் மனிதாபிமானமற்ற முறையில் பேசி மிரட்டுகிறார்கள் எனவும் எதிர்த்துக் கதைத்தால் வீட்டுத் திட்டத்தையே இல்லாமல் செய்வோம் என எச்சரிக்கிறார்கள் எனவும் பல பெண்கள் செஞ்சிலுவை சங்க தொழில்நுட்ப அலுவலர்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகளைக் கூறுகின்றனர்.
“” இவ்வாறான முறைப்பாடுகள் என்னிடமும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் பாலியல் இலஞ்சம் கோருவதான முறைப்பாடுகள் எங்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை. காசு மோசடி செய்கின்றனர், நெருக்கடி கொடுக்கின்றனர், காசை ஒழுங்காக தருகின்றார்கள் இல்லை, அடிப்பதற்கு வருகின்றனர் போன்ற முறைப்பாடுகளே எமக்கு கிடைத்தன.
இவை குறித்து நாங்கள் விசாரித்தபோது பாலியல் லஞ்சம் குறித்த முறைப்பாடுகளும் எங்களுக்கு கிடைத்தன” என்று உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தார் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் த.சேதுபதி.
“”25க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றின் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. தலைமைக் காரியாலயமே இதற்கான நடவடிக்கை மேற் கொள்ள முடியும். எனவே முறைப்பாடுகள் குறித்து நான் நேரில் சென்று தகவல்களைத் திரட்டி தலைமை காரியாலயத்துக்கு அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் தலைமை காரியாலயத்தில் இருந்து வந்த அலுவலகர் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாக சந்தித்து அவரிடம் வாக்கு மூலங்களையும் பெற்றுள்ளார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“”எமக்கும் முறைப்பாடுகள் கிடைத்தன. அதனடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. விசாரணையின் முடிவின் பின்பே நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்க முடியும்” என்று கூறினார் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய செயலாளர் நிமால் குமார்.