பாலியல் தொல்லை வழங்கிய வட்டுக்கோட்டை ஆசிரியரின் மறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை இன்று வரை நீடித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்து வரும் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, விடுப்பில் இருப்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுத்தினார் என பாதிக்கப்பட்ட சிறுமிகளால் வாக்குமூலங்கள் வழங்கப்பட்டன. அதனடிப்படையில் ஆசிரியர் கடந்த ஜூன் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில் கடந்த மாதம் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டு அவரது சட்டத்தரணியால் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தி.அர்ஜூனா, ஆசிரியரைப் பிணையில் விடுவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிணை விண்ணப்பம் மீதான கட்டளையை கடந்த 14ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்று வழங்கியது.

சந்தேகநபர் சார்பான பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது விளக்கமறியல் நேற்று 27ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தது.

Related Posts