பாலியல் துஷ்பிரயோகம் ; இருவருக்கு கடூழிய சிறை தண்டனை – கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு

கிளிநொச்சியில் பதிநான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மற்றுமொரு 18 வயதுடைய இளைஞனுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை அவரது பாதுகாவலரிடம் இருந்து கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பத்து ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த 14 வயதுச் சிறுமியை அவரது பாதுகாவலர்களிடமிருந்து கவர்ந்து சென்ற குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தண்டப்பணம் செலுத்த தவறும் சந்தர்ப்பத்தில் பன்னிரெண்டு மாத கால சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும், இழப்பீடு செலுத்த தவறின் பன்னிரெண்டு மாத கால சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேநேரம் கடந்த 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதினைந்து வயதும் எட்டு மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை பதினெட்டு வயதுடைய இளைஞர் ஒருவர் பாடசாலை கல்வியை தொடர்ந்த சந்தர்ப்பத்தில் காதலித்து, குறித்த சிறுமியை பாதுகாவலரிடம் இருந்து கவர்ந்து சென்று திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிரான வழக்கு வியாழக்கிழமை (10) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் குற்றவாளியாக இனம் கானப்பட்ட இளைஞர் அவரது பாடசாலைக் காலத்தில் குற்றத்தை அறியாது திருமணமாகி குடும்பத்துடன் வாழும் எண்ணத்தில் சிறுமியை அழைத்து சென்றதாகவும் சிறுமியும் முழுமையான விருப்பத்துடன் அவருடன் சென்று வாழ்ந்த நிலையில் குறித்த சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி, விடயங்களை கவனத்திலெடுத்த மன்று இளைஞனுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா பத்தாயிரம் ரூபா வீதம் நாற்பதாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் தலா ஆறுமாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றத்திற்கு பத்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்குகள் இரண்டும் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் அவர்கள் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts