பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்களை திரும்ப அனுப்புவது குறித்த புகார்கள் ஆராயப்படும்

இலங்கையில் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகி பிரிட்டனில் தஞ்சம் கோரி,தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பல தமிழ்ப் பெண்களை பிரிட்டன் இலங்கைக்கே திரும்ப அனுப்பிவருகிறதுஎன்று வரும் புகார்கள் குறித்து பிரிட்டன் ஆராயும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார்.

போர்ப் பகுதிகளில் பாலியல் வன்முறை குறித்த லண்டன் மாநாட்டில் வில்லியம் ஹேக் மற்றும் ஏஞ்செலினா ஜோலி
போர்ப் பகுதிகளில் பாலியல் வன்முறை குறித்த லண்டன் மாநாட்டில் வில்லியம் ஹேக் மற்றும் ஏஞ்செலினா ஜோலி

போர் மற்றும் மோதல் பகுதிகளில் பாலியல் வன்முறையைத் தடுப்பது குறித்த புதிய சர்வதேச உடன்பாடுகளைக் காணும் நோக்கில், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகமும், நடிகையும், ஐநா மன்ற சிறப்புத் தூதருமான ஏஞ்சலினா ஜோலியும் இணைந்து நடத்தும் சர்வதேச மாநாடு நேற்றிலிருந்து லண்டனில் நடந்து வருகிறது.

இலங்கை இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்டது.

இதனிடையே, பாலியல் வன்முறையில் சிக்கி பிரிட்டனுக்கு தஞ்சம் கோரி வந்த இலங்கை தமிழ் பெண்களது தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், அவர்களை மீண்டும் இலங்கைக்கே திரும்பி அனுப்பும் நடவடிக்கைகளை பிரிட்டன் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் பிரிட்டஷ் பத்திரிகையான கார்டியனுக்குக் கருத்து வெளியிடுகையில், “இவ்வாறு திரும்பி அனுப்புவது என்பது பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கையாளும் நடவடிக்கை.

தஞ்சம் அளிப்பது தொடர்பாக பிரிட்டிஷ் அரசுக்குத் தெளிவான விதிகள் இருக்கின்றன. நாங்கள் தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் ஒரு நாடு. இது குறித்து நாங்கள் வைத்திருக்கும் அளவுகோல்களை கடுமையாக அமல்படுத்துகிறோம்.

அதை நாங்கள் சரியாகச் செய்யவில்லை என்று யாராவது சொன்னால் அதை நாங்கள் விசாரிக்கிறோம். இது குறித்து நான் ஏற்கனவே உள்துறை அமைச்சரிடம் விவாதித்திருக்கிறேன்.

குறிப்பாக வெளிநாடுகளில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து நம்முடைய குடிவரவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவேண்டுமென்பது குறித்தெல்லாம் விவாதித்திருக்கிறேன்.

அவரும் இதற்கு உடன்படுகிறார்.சிரியாவிலிருந்து வரும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று கூறுகிறோம். பாதிக்கப்படும் நிலையில் இருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று கூறுகிறோம். அதே சமயத்தில் எங்கெல்லாம் நாம் சரியாக செய்யவில்லை என்பது குறித்த நியாயமான விமர்சங்களை நம் உள்துறை அமைச்சர் ஆராய்வார்”, என்றார்.

இதனிடையே, இலங்கை கலந்து கொள்ள மறுத்த நிலையில் இந்த மாநாட்டில் இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டங்களிலும் அதற்குப் பின்னரும் நடந்த பாலியல் வன்முறைகள் பற்றி போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறுகிறார் பிரிட்டிஷ் தமிழர் பேரவையின் ராஜ்குமார்.

Related Posts