பம்பலபிட்டி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் மாணவி, அப் பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கு செல்லும் மேம் பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இச் செய்தியை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த தகவல்கள் பின்வருமாறு…
15 வயதான மாணவியொருவரே நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் இவ்வாறு கீழே குதித்துள்ளார்.
இதில் படுகாயங்களுக்கு உள்ளான அவர் களுபோவில போதனா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் காவற்துறை தரப்பும், மாணவியின் தரப்பும் முன்னுக்கு பின் முரணான விடங்களையே வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அறியமுடிவதாவது…
நேற்று முன்தினம் குறித்த மாணவியின் வகுப்பில் 400 ரூபாய் பணம் காணாமல் போனதாக முறைப்பாடொன்று வகுப்பு ஆசிரியருக்கு கிடைத்துள்ளது.
இதன்போது குறித்த மாணவியே அந்த பணத்தை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவியை ஏனைய மாணவர்கள் ஏளனம் செய்துள்ளதாகவும், இதனால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி மேம் பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளதாக அந்த மாணவியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பாடசாலை தரப்பும், காவற்துறையும் சேர்ந்து இந்த விடயத்தை மறைத்து வேறு காரணங்களுக்காக தனது மகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக குறித்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த மாணவி மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பம்பலிபிட்டி காவற்துறை தெரிவித்துள்ளது.
காதல் விவகாரம் காரணமாகவே இந்த தற்கொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் இதனை முற்றாக மறுக்கும் அந்த மாணவியின் தாயார், காவற்துறை இந்த விடயத்தை திசை திருப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தனது மகளுக்கு பணம் தொடர்பில் எந்த சிக்கலும் இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பம்பலபிட்டி காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், ஒரு கால், ஒரு கை மற்றும் முதகெலும்பு பகுதியில் காயங்களுடன் குறித்த மாணவி களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.