விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்தார், அவரை இராணுவம் கொல்லவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (6) நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரசின் எம்.பி செ.கஜேந்திரன் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனி்ற்கு பிஸ்கட் கொடுத்து இராணுவம் சுட்டுக் கொன்றது என குற்றம்சாட்டினார்.
இதை மறுத்தார் பொன்சேகா.
அவர் உரையாற்றியபோது, “பிரபாகரனின் மனைவி விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அவரது மூத்த மகன் விடுதலைப் புலிகளின் கேணல் தர அதிகாரி. அவரது மகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவில் உறுப்பினராக இருந்தார். அவரது இளைய மகன் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தை படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார்” என்று பொன்சேகா குறிப்பிட்டார்.
“2009 இல் ஊடகங்களில் பரப்பப்பட்ட படத்தில் பிரபாகரனின் இளைய மகன் சாரம் அணிந்தபடி காணப்பட்டார். அவருக்கு அருகில் சீருடையுடன் சிலர் இருந்தார்கள். அந்த சீருடையை கவனித்தால், இந்திய படையின் காட்டு நடவடிக்கை படையணியின் உடையை போலிருப்பது தெரியும். செ.கஜேந்திரன் தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை தவிர்க்க வேண்டும்“ என்றார்.
பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட எம்.பி, சுதர்சன் டெனிபிட்டிய எழுந்து, செ.கஜேந்திரனின் உரைக்கு ஆட்சேபம் தெரிவித்தார். கஜேந்திரனின் உரையில் பாலச்சந்திரன் குறித்து தெரிவிக்கப்பட்ட பகுதி கருத்துக்களை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.
இதன்போது, நாடாளுமன்ற அமர்வை தலைமைதாங்கிக் கொண்டிருந்த அங்கஜன் இராமநாதன், அது குறித்து தான் கவனம் செலுத்துவதாகவும், “செ.கஜேந்திரன் தனது கருத்தை மட்டுமே வெளிப்படுத்தினார்“ என்றார்.