பாற்சோறைவிடவும் பொங்கல் மிகவும் சுவையானது ! பிரதமர் ரணில்!

யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாகலந்துகொண்டு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய  உரையின் முழு வடிவம் வருமாறு,

தைப்பொங்கல் விழா என்பது யாழ்ப்பாணத்திற்கானதோ அல்லது இந்துக்களுக்கு மட்டுமானதோ அல்லது தமிழ் மக்களுக்கான நிகழ்வோ அல்ல முழு நாட்டுக்கும் பொதுவான தேசிய நிகழ்வாகும். நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சூரிய பகவானை தரிசிக்கின்றோம். ஆகவே இதுவொரு பொதுவான நிகழ்வாகும். இந்த நிகழ்வில் விசேட தன்மைகள் இரண்டு உள்ளன. முதலாவதாக சூரியனுக்கு நன்றி செலுத்துகின்றோம். விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து மகிழ்ச்சியாகவுள்ளார்கள். அதனை விட விசேடமாக விவசாயத்திற்கு உறுதுணையாகவிருந்த எருதுகளையும் கௌரவிக்கின்றோம்.

பொங்கலின் சுவை அதிகம்

தெற்கில் என்னை திட்டுவார்களோ தெரியவில்லை. இருப்பினும் நான் ஒரு விடயத்தை இங்கு கூறுகின்றேன்.அதாவது பாற்சோறைவிடவும் பொங்கல் மிகவும் சுவையானது. தைப்பொங்கல் தினத்தில் அறுவடைகள் நிறைவடைவது ஒருபுறமிருக்கையில் புதிய ஆண்டை ஆரம்பிக்கும் ஒரு நாளாகவும் காணப்படுகின்றது. எமது வரலாற்றினை எடுத்துக்கொண்டால் குண்டகசாலையில் அறுவடை செய்யப்பட்ட நெற்கள் கொண்டுவரப்பட்டு தலதா மாளிகையில் வழிபாடுகள் செய்யும் வழக்கம் காணப்பட்டது.

புதிய வருடமொன்றை ஆரம்பிப்பதென்பது தனியே தமிழர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ முக்கியமானதொரு விடயமல்ல. தாய்லாந்து, மியன்மார், கம்போடியா போன்ற பல நாடுகளில் இவ்வாறான வைபவங்கள் நடைபெறுகின்றன. நானும் எனது பாரியாரும் கம்போடியாவுக்குச் சென்றபோது புதுவருடத்தை முன்னிட்டு வீதிகளில் செல்வோருக்கு தண்ணீர் ஊற்றுவதை அவதானிக்க முடிந்திருந்தது.

கொழும்பில் தேசிய தைப்பொங்கல் தினத்தை கொண்டாடமுடியாது. காரணம் அங்குள்ளவர்கள் வெளிப்பிரதேசத்திற்குச் சென்றுவிடுவார்கள். ஆகவே தான் யாழில் இந்த நிகழ்வை முன்னெடுப்பதற்கு முடிவெடுத்திருந்தோம். இது எமது கலாசார ரீதியானவொரு வைபவமாகும். வெசாக், பொசன், தைப்பொங்கல், நத்தார் போன்றன எமது சமய ரீதியான நிகழ்வுகள்.

மாற்றம்

பூகோளத்தில் மாற்றங்கள் நிகழ்வதைப்போன்று பூகோள அரசியலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறான மாற்றமொன்று  நிகழ்ந்து முழு இலங்கைக்கும் சூரியனின் ஒளி கிடைகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நாட்டவர்கள் அனைவருக்கும் பிரகாசமான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதன்காரணமாகவே இன்று(நேற்று) இந்த விழாவைக் கொண்டாட முடிந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திபாலசிறிசேனவுக்கு தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்நிகழ்வில் பங்கேற்றமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பங்கேற்றிருக்கின்றார். இந்த நாட்டில் சூரிய வெளிச்சமின்றி வாழ்ந்தவர்களுக்கு தற்போது பொறுமையற்ற தன்மையொன்று ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் தீர்வாக இருக்கலாம், தொழில் வாய்ப்பாக இருக்கலாம், அபிவிருத்தியாக இருக்கலாம் அனைத்திலும் பொறுமையற்ற நிலைமைகளே காணப்படுகின்றன.

பொறுமை வேண்டும்

வடக்கு கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் அதிகமாக பாதிகப்பட்டவர்கள் என்பதை அடிப்படையாக கொண்டு இவ்வாறான பொறுமையற்ற தன்மை பலருக்கு காணப்படுகின்றது. வடமாகாண முதலமைச்சர் இவ்விடயம் தொடர்பாக சில விடயங்களை பேசியிருந்தார். அதன் அடிப்படையில் அவ்விடயங்கள் தொடர்பாக நான் சில கருத்துக்களை முன்வைக்கலாமென நினைக்கின்றேன்.

காணிவிடயம்

வடக்கு கிழக்கில் 4600ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. அதனை விடவும் சொற்ப அளிவிலான நிலங்களே மக்கள் பாவனையின்றி காணப்படுகின்றன. பொதுமக்களுக்கு தேவையான காணிகள், அபிவிருத்திக்கு தேவையான காணிகள், இராணுவத்திற்க தேவையான காணிகள் ஆகிய தரவுகளை சேகரித்துக்கொண்டு நாம் அனைவரும் கலந்துரையாடி கொள்கைரீதியான தீர்மானமொன்றை எடுக்கவேண்டுமெனக் கூறியிருந்தேன்.

இரண்டு மாதங்களுக்க முன்னதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வட கிழக்கு முதல்வர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இந்தப்பிரச்சினையை நீண்டகாலத்திற்கு காலங்கடத்திக் கொண்டு செல்ல முடியாது. 2020ஆம் ஆண்டில் இந்த நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்றபோது, அதிகளவு வருமானம் பெறப்படுகின்றபோது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையான பயனை வழங்கவேண்டும்.

சிங்களமொழி

தற்போதும் சிங்கள மொழியிலேயே கடிதங்கள் அனுப்பப்படுவதாக வடமாகாண முதலைமைச்சர் கூறியிருந்தார். அது தவறானது. தமிழ் மொழியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. தமிழ் மொழிமூலமாக கடமையாற்றுபவர்கள் தொடர்பில் குறைபாடுகள் இங்கு காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்யவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன. கொழும்பு திரும்பியதுடன் அதுதொடர்பிலான தாமதங்களுக்கான காரணங்களை கண்டறிந்து செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளேன். குறிப்பாக இவ்வாறான குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக முதற்கட்டமாக பயிற்றப்பட்ட 500பேர் நியமிப்படவுள்ளனர். அதன் பின்னரும் தேவைகள் காணப்படுமாயின் மேலதிகமாக நியமிப்பதற்கு தயாராவுள்ளோம்.

அரசியல் கைதிகள்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், சாஹல ரட்நாயக்க, விஜயதாஸ ராஜபக்ஸ மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்தரையாடியுள்ளேன். அதில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்ததன் பின்னர் உத்தியோக பூர்வமான அறிவிப்பை வெளிப்படுத்துவோம்.

பயங்கரவத தடைச்சட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது காலவதியாகிவிட்டது. காலவதியான பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் நீக்கவுள்ளோம். இங்கு பயங்கரவாதமில்லை. சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பதற்காக ஐக்கியநாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டதான புதிய சட்டங்களை உள்வாங்குதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அவ்வேலைத்திட்டம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

காணமல்போனோர் விடயம்

காணமல்போனோர் தொடர்பாக நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எமது பட்டியலில் காணப்படதாவர்களுக்கு என்ன நடந்ததென்று எனக்கு தெரியாதுள்ளது. மிகவும் கவலையுடன் ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். அவ்வாறானவர்களில் பெருமளவானோர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றே கருதப்படவேண்டியுள்ளது. இவ்வாறான பிரச்சினை தெற்கிலும் காணப்பட்டது. முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆலோசனையின் கீழ் அவ்வாறானவர்களுக்கு இழப்பீடுகள், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.  அது மட்டுமன்றி பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான மத்திய நிலையம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்பிரதேசத்தின் மாணவர்களின் கல்வி தொடர்பாக கவனமெடுக்கப்படவேண்டியுள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாணத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர், இராஜங்க அமைச்சர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

இராணுவம் , பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இலங்கைச் சட்டங்களுக்கு உட்பட இராணுவத்தினரே இருக்கின்றார்கள். 1990ஆம் ஆண்டு இந்திய சமாதானப்படையினர் வெளியேறிவிட்டார்கள். ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலை புலிகள் முடக்கப்பட்டார்கள். 2002ஆம் ஆண்டு கைச்சாத்தான சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் நிலம், கடல், வான் பகுதிகளை பாதுகாப்பதற்கான உரிமையும் கடமையும் இராணுவத்தினருக்கு இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கூட அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். விசேடமாக வடக்கில் காணப்படும் இராணுவ பிரசன்னம் தொடர்பாக இராணுவத்தளபதியுடன் நான் பேச்சவார்த்தை நடத்தியுள்ளேன். வடமாகாணத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் மேம்பாடடையும் பட்சத்தில் படிப்படியாக இங்குள்ள இராணுவத்தினரை வேறு இடங்களுக்கு அனுப்பமுடியுமெனக் கூறியுள்ளார். இராணுவத்தில் பலர் ஓய்வு பெறவுள்ளனர். அவர்களின் ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் சதாரண வாழ்கையை வாழ்வதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இரகசியம்

இங்கு ஒரு இரகசியத்தை உங்களுக்கு கூறுகின்றனர். நாம் மூன்று படைப்பிரிவினர்களுக்கு யுத்த பயிற்சிகளை வழங்கி வருகின்றோம். ஆபிரிக்காவின் மாலி போன்ற நாடுகளுக்கு யுத்ததிற்காக அனுப்புவதற்கும், ஐக்கிய நாடுகள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் வேறு நாடுகளில் செயற்படுவதற்காகவுமே நாம் அப்பயிற்சிகளை வழங்குகின்றோம்.

மீனவர்களின் பிரச்சினைகள் பூரணமாக தீர்க்கப்படும் வரையில் கடற்படையில் குறைப்புக்களை மேற்கொள்ள முடியாது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும், நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடத்தில் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் பிரிவில் மேலும் 500 தமிழ் மொழி பேசுபவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இலங்கை முப்படையினரும், பொலிஸ் பிரிவும் முழுமையாக இலங்கையர்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்படவேண்டும். தற்போது காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

ஐ.நா தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் போரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். குற்றமிழைத்தவர்கள் இராணுவத்தினராக இருக்கலாம் புலிகளாக இருக்கலாம் அவர்கள் இனங்காணப்படவேண்டும். அதற்கான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பொறிமுறையை அமைப்பதற்காக ஜப்பான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். சர்வமத தலைவர்களை உள்ளடக்கிய கருணை சபையொன்றையும் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அதேநேரம் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான பொறிமுறையொன்றையும் உருவாக்குவது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றோம்.

அரசியல் யாப்பும் வெளிப்படைத்தன்மையும்

அரசியலமைப்பை மறுசீரமைப்பு செய்வற்காக அமைச்சரவையில் தீர்மனம் மேற்கொண்டோம். அதற்கமைய பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றுவதற்கான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வெளிப்படையாக செய்யவுள்ளோம். அந்த விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபையுடன் கூட கலந்துரையாடமுடியும். மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அரசியலமைப்பு தொடர்பான வரைவு தற்போது இல்லை. மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலிருந்தே அரசியல் அமைப்பு வரைவு தொடர்பான கட்டமைப்பு மக்களின் கருத்துக்கள் மூலமாகவே உருவாகவேண்டும். 18ஆவது திருத்தத்தை பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் மேற்கொண்டமை போன்று சர்வாதிகாரத்தனமாக மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
தற்போது தோல்விடையந்த பின்னரே அவர்களுக்கு வெளிப்படைத்தன்மை புரிகின்றது. அது தொடர்பாக அழுகுரல் எழுப்புகின்றனர். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225பேரும் ஒன்றிணைந்து வெளிப்படைத்தன்மையுடன் அரசியல் அமைப்பு வரைவை உருவாக்கவேண்டும். அதிகாரங்களை பகிர்வதற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் நாம் தயாராகவிருக்கின்றோம்.

ஒன்றுபடுவோம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு சந்திரிகாவை கண்முன்னால் காணவே பிடிக்காது எனக் கூறினார். ஆனால் 13ஆவது திருத்தச்சட்டத்தின் போது நாம் ஒன்றுபட்டிருந்தோம். இக்காலத்தின்போது சந்திரிகாவின் கணவன் மரணமடைந்தார். எமது தரப்பினர் 5ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஜே.ஆர். ஜெயவர்த்தன உருவாக்கிய அடுத்த தலைமுறை தலைவர்களின் மேலதிக சக்கரமாக காணப்பட்ட நான் மட்டுமே எஞ்சியுள்ளேன். ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு அனைத்துப்பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி அடுத்த தைப்பொங்கல் நிகழ்வில் சிறந்த சூழல் உருவாக்கப்படவேண்டுமெனக் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

Related Posts