பார்பர் வீதி கோவில் பிரச்சினைக்கு சுமூக தீர்வு

மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகா வித்தியாலய வீதியின் 36ம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் தேர் திருவிழா இம் மாதம் 22 முதல் 31க்கு உட்பட்ட தினத்தில் நடைபெறும். தற்சமயம் நவராத்திரி உற்சவங்கள் ஆரம்பித்து உள்ளதால் இந்த திருவிழா தேர் பவனியுடன் இந்த மாதமான ஒக்டோபர் இறுதிக்குள் ஆகமமுறைப்படி சாஸ்திரிகள் தீர்மானத்து கொடுக்கும் ஒரு சுபதினத்தில் நடைபெறும்.

இது தேசிய கலந்துரையாடல் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மாகாணசபை உறுப்பினர்கள் சண். குகவரதன், கே. டி. குருசாமி, மாநகரசபை உறுப்பினர்கள் பிரியாணி குணரத்ன, பார்பர் வீதி 36ம் இலக்க தோட்டத்தை சார்ந்த ஆலய மற்றும் பள்ளிவாசல் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டார்கள் என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

எனது அழைப்பை ஏற்று இந்த கலந்துரையாடலில் இரு தரப்பினரும் கலந்துக்கொண்டனர். இதன்போது குறிப்பிட்ட தோட்டத்தை சார்ந்த ஆலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மத நல்லிணக்கத்தை முன்னெடுப்பது என்றும், 10ம் திகதி நடத்தப்படவிருந்த கோவிலின் தேர்த்திருவிழா எவ்வித தடையும் இன்றி நடத்தப்பட வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானித்தனர்.

தற்போது நவராத்திரி உற்சவம் ஆரம்பித்துள்ளதால், தேர்த்திருவிழாவை இம்மாதம் 22 முதல் 31க்கு உட்பட்ட ஒரு சுப தினத்தில் நடத்துவது என்றும் மேலும் முடிவு செய்யப்பட்டது.

நண்பர் முஜிபுர் ரஹ்மான் மிகவும் பொறுப்புடன் இந்த தேசிய நல்லிணக்க செயற்பாட்டில் கலந்துக்கொண்டு பங்களித்துள்ளார். இன்றைய பேச்சில் கலந்துக் கொள்ளாவிட்டாலும் கூட முன்னாள் மேயர் ஓமர் காமில் அவர்களும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி, தேசிய மத நல்லிணக்கம் ஏற்பட உதவியுள்ளார்.

இவர்கள் அனைவரையும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் என்ற முறையில் நான் பாராட்ட விரும்புகிறேன். அத்துடன் இந்த விவகாரம் எல்லை மீறி சென்று தேசிய ஐக்கியத்தை குழப்பி, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தீவிரவாதத்துக்கு இடமளித்து விடக்கூடாது என்ற நோக்கில் மிகுந்த சகிப்பு தன்மையுடன் செயற்பட்ட ஆலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் நான் பாராட்ட விளைகின்றேன்.

Related Posts