கிழக்கு பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து பலரை சிறை பிடித்த நபரையும் போலீஸ் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இரு முற்றுகைப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சயித் குவாச்சி மற்றும் செரிப் குவாச்சி ஆகிய சகோதரர்கள் வடகிழக்கு பாரீஸில் உள்ள தம்மார்டின் டி கோயல் நகரில் உள்ள தொழிற்சாலைக்குள் புகுந்தனர்.
அவர்கள் ஒருவரை பிணையக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர்.
அவர்கள் இருக்கும் தொழிற்சாலையை போலீசாரும், ராணுவத்தினரும் சுற்றி வளைத்து நேற்று இரவு நடத்திய தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டனர்.
அதேபோல, கிழக்கு பாரீஸில் உள்ள போர்ட் டி வின்சென்ஸ் பகுதியில் இருக்கும் கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த தீவிரவாதி ஒருவர் 5 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால் பரபரப்பு கூடியது.
சூப்பர் மார்க்கெட்டுக்குள் இருந்தவர் அமேதி கவ்லிபாலி (32) என்றும், பாரீஸின் மலகாப் பகுதியில் பெண் போலீஸ்காரரை சுட்டுக் கொன்றவர் அவர் தான் என்றும் கூறப்பட்டது. இந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கவ்லிபாலி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வசம் இருந்த பிணைக் கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மீட்பு பணியின்போது 2 போலீசார் காயம் அடைந்தனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக பிரான்ஸை உலுக்கி வந்த தீவிரவாத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது.