பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர்.
பாரிஸ் நகரின் அருகே உள்ள மாண்டிவ்ரேய்ன் என்ற நகர் அருகே உள்ள பெருவணிக வளாகம் ஒன்றின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தப் புலி தென்பட்டதாக ஒரு பெண் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
இதனை அடுத்து, போலிசாரும் தீயணைப்பு வீரர்களும் அப்பகுதியில் இந்தப் புலியைத் தேட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர்களும் இந்தத் தேடல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த விலங்கின் கால் தடங்களைப் பார்வையிட்ட வல்லுநர்கள், இது ஒரு இளம் புலியின் கால் தடங்களை ஒத்ததாக இருப்பதாகக் கூறினர். இது நகரின் அருகே இருக்கும் ஒரு வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தப் புலியை பல உள்ளூர்வாசிகள் பார்த்ததாக ‘லெ பாரிசியன்’ செய்தித்தாள் கூறியது.
பொதுமக்களும், சிறார்களும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப்புலி எங்கிருந்து வந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
நகரில் சனிக்கிழமைவரை இருந்த ஒரு சர்க்கஸ் கம்பெனியிலிருந்து இந்தப் புலி தப்பியிருக்ககூடும் என்ற செய்திகளை நகர மேயர் அலுவலகம் மறுத்திருக்கிறது.
பாரிசில் இருந்து இயங்கும் ‘டிஸ்னிலேண்ட்’ கேளிக்கை பூங்கா நிறுவனம் தன்னிடம் புலி எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.