பாரியளவு போதைப் பொருளுடன் இரு இலங்கை இளைஞர்கள் இந்தியாவில் கைது

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் சுமார் 06 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளுடன் 2 இலங்கை வாலிபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விமானத்தின் பயணத்தை ரத்து செய்து விமானத்தை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது இலங்கையை சேர்ந்த 2 வாலிபர்களின் பயணப் பைகளில் மொத்தம் 3 கிலோ 600 கிராம் எடையுள்ள ‘பிரவுன்சுகர்’ போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்துக்குள் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையை மீறி போதைப் பொருள் கொண்டு வந்தது எப்படி என்று அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தபோது, இலங்கை வாலிபர்களின் பைகளை சோதனை செய்யாமல் தற்காலிக ஊழியர் ஒருவர் எடுத்து செல்வது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

Related Posts