பாராலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர் பஹ்மான் பரிதாபமாக பலி

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் (48) திடீர் மாரடைப்பால் காலமானார்.

bahman-golbarnezhad

ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் கரடுமுரடானதும், வளைவுகள் நிறைந்ததுமான மலைப்பாதையில் நேற்று சைக்கிள் ஓட்டும் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் பங்கேற்று இதர நாட்டு வீரர்களுக்கு போட்டியாக தனது சைக்கிளை வேகமாக மிதித்தபடி சென்றார். ஒரு குறுகிய வளைவில், எதிர்பாராதவிதமாக இன்னொரு சைக்கிள் மீது அவரது சைக்கிள் மோதியது.

இதையடுத்து, தரையில் சாய்ந்த சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத், திடீரென நெஞ்சு வலியால் துடித்தார். சம்பவ இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 1960-ம் ஆண்டில் தொடங்கிய பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் தற்போது முதன்முறையாக ஏற்பட்ட இந்த அதிர்ச்சிகரமான விபத்து தொடர்பாக ஈரான் நாட்டு பாராலிம்பிக் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஈரான் ஒலிம்பிக் கிராமத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

Related Posts