மத்திய வங்கி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சர்ச்சை நிலை எழுந்திருந்த போது காமத்தரகர்கள் சபைக்குள் இருப்பதாக இரு தரப்பிலிருந்தும் பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது மேற்படி விவகாரம் தொடர்பில் சர்ச்சை எழுந்தது. 200க்கு மேற்பட்ட மத்திய வங்கி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் இது பழிவாங்கல் நடவடிக்கையாகவே இடம்பெற்றிருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குற்றம் சாட்டினார்.
தினேஷ் குணவர்த்தனவின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துக் கொண்டிருந்த போது முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் சுதந்திரக் கட்சி பின் வரிசை உறுப்பினர்கள் பலர் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரைப் பார்த்து கூச்சலிட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச எம்.பி. காமத்தரகர்கள் என்று விளித்துக் கூறினார்.
இதனை செவிமடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆமாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்துதான் காமத்தரகர்கள் இந்த சபைக்குள் நுழைந்திருக்கின்றனர் என்றார்.
சபையில் கூச்சல் குழப்பம் அதிகரித்தமையால் விமல் விரவன்ச எம்.பி.யினால் கூறப்பட்ட காமத்தரகர் என்ற சொல் பெரிதாக கேட்கவில்லை. என்ற போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கூறப்பட்டது நன்றாகவே ஒலிவாங்கியில் உள்வாங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து எழுந்த விமல் வீரவன்ச எம்.பி. பிரதமரால் கூறப்பட்ட வார்த்தை பாராளுமன்ற உறுப்பினர்களை வெட்கப்படுத்தும் வார்த்தையாகும். ஆகவே அதனை அவர் வாபஸ் பெறவேண்டும் என்று சபாநாயகரிடம் முறையிட்டார்.
எனினும் சபாநாயகர் விமல் வீரவன்ச எம்.பி.யின் முறைபாட்டை செவிமடுக்காது சபையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு சென்றார்.