பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்பு

யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதேவேளை இந்த இளைஞர்களின் மரணம் தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு, இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அவர்களை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்தின் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தவிர குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts