பாபநாசம் கிளம்பத் தயாராகிவிட்ட கமல்

ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க தயாராகிவிட்டார் கமல்.

kamal-haasanjpg

இந்த படத்திற்கு பாபநாசம் என்று தலைப்பு வைத்திருப்பது தெரிந்த விஷயம்தான். பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கப்போகிறார் என்பது முடிவாகாமலே இருந்தது. முதலில் மலையாளம் மற்றும் தெலுங்கு திருஷ்யம் படங்களில் நடித்த மீனாவே தமிழிலும் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அதற்குப் பிறகு மீனா நடிக்கவில்லை, ஸ்ரீதேவி, கௌதமி இருவரில் ஒருவர் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. இப்போது அந்த கமலுக்கு ஜோடியாக நடிப்பது கௌதமிதான் என்பது உறுதியாகி விட்டது.

இந்த தகவலை பாபநாசம் படத்தை இயக்கும் ஜித்து ஜோசஃபே தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் பெண் போலீஸ் அதிகாரி கேரக்டர் ஒன்று முக்கிய கேரக்டராக உள்ளது. இந்த கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவி பெயர் பரிசீலிக்கப்பட்டது. பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அந்தக் கேரக்டரில் மலையாளத்தில் நடித்த ஆஷா சரத்தையே நடிக்க வைக்கலாம் என்று தீர்மானித்துவிட்டனர்.

இவரது கேரக்டர் தவிர படத்தில் இன்னொரு முக்கிய போலீஸ் கேரக்டரும் உண்டு! கிட்டத்தட்ட வில்லனை போன்ற நெகட்டிவ்வான இந்த போலீஸ் கேரக்டரில் நடிக்க தற்போது கலாபவன் மணியை இறுதி செய்திருக்கிறார்கள்.

பாபநாசம் படத்தின் கதைப்படி கமலுக்கு இரண்டு மகள்கள்! மூத்த மகளாக நிவேதா தாமஸ் நடிக்க இருக்கிறார். இவர் நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்தவர். இளைய மகளாக மலையாளத்தில் நடித்த எஸ்தர் நடிக்கிறார்.

பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் திருநெல்வேலியில் ஆரம்பமாகவுள்ளது.

Related Posts