“பான் கீ மூன் என்ன கோரிக்கை விடுத்தாலும் ஐ.நா. விசாரணைக்குழுவின் சர்வதேச விசாரணை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
“ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்னும் பத்து நாட்களில் ஓய்வுபெறப் போகின்றார். எனவே, அவரால் நியமிக்கப்பட்ட ஜ.நா. விசாரணைக்குழு பற்றி இலங்கை அரசு அலட்டிக்கொள்ளாது” என்றும் அவர் அவர் குறிப்பிட்டார்.
“ஜ.நா. விசாரணைக்குழு இலங்கை வர விஸா வழங்கப்படாது என்று ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனவே, அரசின் முடிவில் மாற்றம் எதுவும் இனிமேல் வராது” என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ – மூன் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மருதானையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியா விஜயம் சாதாரண விடயம். இது அனைவராலும் எதிர்பார்த்த ஒன்று. இந்தியாவின் புதிய பிரதமரை சந்திக்க கூட்டமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில், இந்திய மத்திய அரசின் அழைப்புக்கிணங்க சம்பந்தன் எம்.பி. தலைமையிலான கூட்டமைப்பினர் புதுடில்லி சென்றுள்ளனர். ஆனால், இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய பங்கை வகிக்கும் சுப்பிரமணிய சுவாமி கடந்த சில தினங்களாக கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.
அவர் அதில் முக்கிய சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். எமது நாட்டின் அரசியல் மற்றும் ஏனைய நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு சிறந்த புரிந்துணர்வு உள்ளது. அதனடிப்படையில் நாம் செயற்பட்டு வருகின்றோம்” – என்றார்.