யாழ்ப்பாணத்திலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்துக்குச் சென்று வருவதற்கு, உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது.
இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின்போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத் தகவல்களையும், தகுந்த முன்னெச்சரிக்கையையும் வழங்குவதில் யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் பெரும் பங்காற்றி வருக்கின்றது.
ஆனால், அந்தத் திணைக்களத்துக்குச் செல்வதற்கு உகந்த பாதை இல்லாத காரணத்தினால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள், அனர்த்த முன்னெச்சரிக்கைச் செய்தி சேகரிப்புக்குச் செல்லும் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
சுமார் 400 மீற்றர் நீளமான மிகக் குறுகிய பாதையின் இரு மருங்கிலும் பற்றை மண்டி ஒற்றையடிப்பாதை போல அந்தப்பாதை காட்சி தருகிறது. ஒவ்வொரு காலப் பகுதியிலும், அந்தப் பாதையைச் சீர்செய்து தருமாறு அரசியல் தலைவர்களிடமும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், பாதை பற்றி அக்கறை கொள்வோர் யாருமில்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது.