பாதுகாப்பு படையினர் தமிழ்மக்களுக்கு செய்யும் நற்பணிகளில் 2வீதமான பணிகளைக்கூட செய்யாத த.தே.கூட்டமைப்பு – திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன்

Geethanjali Naguleswaranயாழ்ப்பாணத்திலுள்ள இந்திய பிரதி உயர் ஸ்தானிகரகத்தில் இடம்பெற்ற இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய எம்.பி க்கள் குழுவுடனான சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள்:

இந்தச் சந்திப்பில் வடபகுதி அரசியல் பிரமுகர்களும் அரசசார்பற்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பாதுகாப்பு படையினரை வடபகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மக்களின் பணிகளில் இராணுவத்தினர் அநாவசியமாக தலையிடுவதனால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறதென்றும் பொதுமக்களுக்கு சொந்தமான பெருமளவு காணிகளை இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறதென்றும் குற்றம் சாட்டினார்.

காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு இதுவரையில் எவ்வித தீர்வையும் ஏற்படுத்தவில்லை என்றும், குடிபெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டுமென்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றத் தவறிவிட்டதென்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

சுமந்திரனின் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரான திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவிக்கும் இத்தகைய குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லையென்று மறுப்புத் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினர் தமிழ்மக்களுக்கு செய்யும் நற்பணிகளில் 2வீதமான பணிகளைக்கூட செய்யாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்களைப் பற்றி பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லையென்று திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் கூறினார்.

ஜனாதிபதி அவர்கள் பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்த காரணத்தினால் இன்று தமிழ் மக்கள் உலகத்தின் எந்தவொரு நாட்டுக்கும் சுதந்திரமாக தலை நிமிர்ந்து சென்று வருவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்று தெரிவித்த திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், எல்.ரி.ரி.ஈ. அழிக்கப்படுவதற்கு முன்னர் உலகில் எந்த இடத்திலும் தமிழர்களைப் பார்த்தால் இவர்கள் பயங்கரவாதிகள் என்று நாமம் போடும் வேதனைக்குரிய கடந்த காலம் இன்று நீங்கி விட்டதென்று கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் இப்போது படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதென்றும் அவர் கூறினார். இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறி வருகிறதென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச அரங்குகளில் முறைப்பாடு செய்வது தவறு என்றும் அரசாங்கம் இதனை நிறைவேற்றி வருவதை புரிந்து கொண்டும்கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்விதம் உண்மைக்கு மாறான கருத்துகளை வெளியிடுவது கண்டிக்கத்தக்க விடயமென்றும் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மக்களை மீள் குடியேற்றும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென்றும் பாதுகாப்பு படையினரின் பூரண ஒத்துழைப்புடன் இப்போது வடபகுதியில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் சேர்த்த இரண்டு இலட்சம் ரூபாவை பயன்படுத்தி ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டை அவர்களுக்கு நிர்மாணித்து கொடுத்துள்ளார்கள் என்று கூறினார்.

அரசாங்கம் செய்வதைப் போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் இவ்விதம் தமிழ் மக்களுக்கு உதவ முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சளவில் மாத்திரமே மக்களுக்கு சேவை செய்துவிட்டு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணத்தை முடக்கிக் வைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அன்று அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட குமரன் பத்மநாதன், கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்கள் இன்று பயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயக அரசியலில் சேர்ந்து சுதந்திரமாக நாட்டில் வாழ்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம் சாதாரண மக்களை மறைத்து வைத்திருப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை என்று திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கூறப்படுபவர்களில் பலர் எல்.ரி.ரி.ஈ.யினால் கொல்லப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று தெரிவித்த திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், இவர்கள் அனைவரையும் இராணுவம் கொன்றது என்று தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்தார்.

எல்.ரி.ரி.ஈ.யினர் அப்பாவி மக்களை மனிதக்கேடயங்களாக வைத்து யுத்தம் செய்ததனால் தான் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மரணிப்பதற்கு காரணம் என்று தெரிவித்த திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல தீர்வை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற அசையாத நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்கிறதென்றும் தெரிவித்தார்.

வடபகுதியில் தமிழ்ப் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் ரீதியல் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்ற போதிலும் வெளிநாடட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

Related Posts