வடக்கில் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாக கனடா முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வடக்கு பெண்களை சிறிலங்காவின் இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாக கனடா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் குற்றம் சுமத்தி இருந்தது.
அத்துடன் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தினால், வடக்கில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நிராகரித்து இலங்கையின் மனித உரிமைகள் பேரவைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
இதில் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்ததுடன், இதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தும் என்றும் கூறியுள்ளார்.
இன்றைய சபை அமர்வின் போது, கனடா அரசினால் இலங்கை படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில், இராணுவத்தினரால் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை முற்றாக நிராகரித்த இலங்கை அரசாங்கம், அதற்கான பதிலையும் வழங்கியுள்ளது.
இலங்கையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருகின்றோம். குறிப்பாக, பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
யுத்த காலத்திலும் யுத்தம் முடிவடைந்த காலத்திலும் மிகக் குறைந்தளவிலான படையினரே பாலியல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். யுத்தம் உக்கிரமாக இருந்த 2007 ஜனவரி தொடக்கம் 2009 மே வரையான காலப்பகுதியில், வடக்கில் 5 பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 7 பாதுகாப்பு படையினரே இனங்காணப்பட்டுள்ளனர். அக்காலத்தில் மொத்தமாக 119 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 225 சந்தேக நபர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 7 பேர் மட்டுமே படைத்தரப்பைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய அனைவரும் வடக்கினைச் சேர்ந்தவர்கள்தான்.
அதேபோல், யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியான 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற 256 பாலியல் வன்முறைச் சம்பவங்களில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 307 நபர்களில், 6 பாலியல் வன்முறைச் சம்பவங்களில் தொடர்புபட்ட 10 பேர் மட்டுமே பாதுகாப்பு படையினரைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி, யுத்த காலத்தில் 5.6 சமவீதமான படையினரும், யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் 3.3 சதவீதமான படையினரும் மாத்திரமே பாலியல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். இவை, நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து தொகுக்கப்பட்டவையாகும்.
இச்சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான சட்டப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றச்செயலில் ஈடுபட்ட படையினர் மீது, படைத்துறை சட்டம் மூலமாகவும் சிவில் சட்டம் மூலமாகவும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, படைத்தரப்பினருக்கு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் மனித உரிமை தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், இலங்கையிலுள்ள சகல அரச துறைகளிலும் பெண்கள், சிறுவர்களுக்கான விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களின் பாதுகாப்பு மிகவும் வலுவுள்ள நாடாக இலங்கை திகழ்கிறது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், கனடாவினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டினை நாங்கள் மறுக்கின்றோம். ஆதாரமற்ற முறையில், எம்மீது வீண் பழி சுமத்துவதற்காக, கனடா முயற்சிக்கின்றமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஆகையினால், பொறுப்பற்ற மற்றும் நம்பகமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து விலகி செயற்படுமாறு கனடாவை கேட்டுக் கொள்கிறோம் என, இலங்கை அரசாங்கம் தனது மறுப்பறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்திருக்கிறது.