இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால நீதிப் பொறிமுறைகளில், சாட்சியமளிக்கத் தயார் என, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பாதுகாப்பு மற்றும் அடையாளம் வெளிப்படுத்தப்படாது என்பதற்கும் உத்தரவாதம் வழங்குகின்ற பட்சத்தில் சாட்சியமளிக்க தயார் என அவர்கள் கூறியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, மனித உரிமைகளுக்கான நிறுவகத்துடன் இணைந்து, இலங்கையின் அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம் மேற்கொண்ட ஆய்வின் போதே, அவர்கள் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
நான்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள 75 தமிழர்களிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இவர்களில், 54 பேர் முன்னாள் விடுதலைப் புலிகள் என்பதோடு, 26 வீதமானோர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவர்கள் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின், ஐரோப்பாவுக்கு சென்றவர்களாவர்.
அவர்களில் கால்பங்கினர், முன்னாள் போராளிகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு வேலைத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டவர்கள். விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தம்மால் அங்கு தப்பித்து வாழுதல் சாத்தியமற்றது என்று உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் பங்கேற்ற 73 வீதமானோர், போர் நிறுத்தப்பட்ட பின்னர், தாம் இலங்கை படைகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
54 வீதமானோர், தாம் பாலியல் வல்லுறவு அல்லது ஏனைய பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.