யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில், அரசாங்கம் இவ்விடயம் குறித்து விரைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நாம் இந்த அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம். இவ்விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுடனான ஏற்பாடுகள், கலந்துரையாடல்கள் இடம்பெற்று அடிப்படையில் அனைவரது மத்தியிலும் பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் நீண்ட காலமாக பாரிய கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளனர். அம் மக்கள் மத்தியில் பல்வேறு துயரங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் விரைந்து தீர்க்கப்பட வேண்டிய பல நியாயபூர்வமான விடயங்கள் இருக்கின்றன. இவ்வாறான விடயங்களில் அரசாங்கத்தின் மந்தகதியான செயற்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்து, இச் சபையில் நான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முறையிட்டிருக்கிறேன். இவ் விடயங்கள் குறித்து அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டிய அவசியம் காணப்படுகிறது” என்றார்.