தென்னிலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களை வழங்க யாழ்ப்பாண மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக மாவட்ட செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்த உதவி திட்டத்தில் பொதுமக்களையும் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இது விடயம் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
தென்னிலங்கையில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் தொடர்ந்தும் தேவையாக இருக்கின்றது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்.மாவட்ட மக்களின் நல்லெண்ண உதவியாக யாழ்.மாவட்ட செயலகம் ஊடாகவும், யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலர் அலுவலகங்களிலும் மக்கள் தங்கள் உதவிகளை வழங்கலாம்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் தொண்டாற்றுவதற்கு விருப்பம் உள்ளவர்களும் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்யலாம்.
யாழ்.மாவட்டத்தில் வறட்சி நிலை தொடர்பாக… யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் மாரி மழை பெய்யாமையினால் யாழ்.மாவட்டத்தில் கடுமையான வறட்சி உருவாகியுள்ளது.
இதனால் வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், மருதங்கேணி, போன்ற கடலை அண்டிய பகுதிகளில் உள்ள 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகின்றன.
மேலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 6 புதிய பவுசர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. எனவும் தெரிவித்துள்ளார்