யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு நிறுவனங்கள் செய்யும் உதவிகள் இன்றியமையாததாக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐ.ஒ.சி நிறுவனத்தின் நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டு பாசையூரில் அமைந்துள்ள யாழ். மாநகர சபையின் ஆரம்ப சுகாதார நிலையம் புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் கோரிக்கையின் பேரில் யாழ் தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் அமைந்திருந்த யுபிலி மகப்பேற்று மருத்துவமனையினை புனரமைப்பு செய்து மீள கையளித்தார்கள். அவர்களின் பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்ட மகப்பேற்று மருத்துவமனை கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. அது இப்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மீண்டும் யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் கோரிக்கையின் பேரில் பாசையூர் மருத்துவ நிலையம் 5 மில்லியன் 920 ஆயிரம் ரூபாய் செலவில் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அப்பேற்பட்ட மக்களிற்கு ஓரளவிற்காயினும் தமது தேவைகளை முன்னேற்ற ஐ.ஒ.சி நிறுவனத்தின் உதவிகள் போற்றுதலுக்குரியது. இந் நிறுவனத்தின் செயற்பாடானது ஏனைய நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும் அதிக இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இது போன்ற சமூக தொண்டுகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.