பாதிக்கப்பட்டவர்கள் நஸ்டஈட்டைப் பெற உடன் பதிவு செய்யுங்கள்!

வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக முற்றாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், பொருட்களுக்கு ஒரு இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை நஸ்டஈடு வழங்கப்படவுள்ளதால், தமது பகுதிகளுக்கு சொந்தமான கிராம சேவகர்களை சந்தித்து பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷணி குணதிலகவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடுகளை வழங்க அரசாங்கத்தால் 1000 கோடி (10 பில்லியன்) ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, பொருட்கள் மற்றும் வீடுகளின் சேத விபரங்களை விரைவில் மதிப்பீடு செய்யும் வகையில் பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், தற்போது வரை முழுமையாக 540 வீடுகளும் பகுதியளவில் 4190 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத் தேவையான நிதியை எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி விடுவிக்குமாறு திரைசேரிக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் 57,089 குடும்பங்களைச் சேர்ந்த 229,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

எனினும் 25,954 குடும்பங்களைச் சேர்ந்த 120,132 பேர் தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இதன் நிமித்தம் 256 நலன்புரி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீள தங்களது வீடுகளுக்குத் திரும்பும் வரை அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், சீருடைகள் மற்றும் ஏனைய பொருட்களை அரசாங்கம் வழங்கவுள்ளது.

அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை தொடர்ந்தும் வழங்க அரசாங்கம் தற்போது முறையான வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் பணமாக வழங்க முடியும் என, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷணி குணதிலகவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, இதற்காக திறக்கப்பட்டுள்ள இலங்கை வங்கியின் 7040171 எனும் அனர்த்த உதவிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Posts