பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க சர்வதேச பொறிமுறை அவசியம்!

காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் சட்டத்தில் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்றும், உண்மைகளை கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச பங்களிப்புடன் கூடிய பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு அவசியம் எனவும் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தை அனுஷ்டிக்கும் இந்த தருணத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக பலர் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டனர். வெள்ளை வேன் கடத்தல், கைதின் பின் காணாமல் போனதல் என பலரை இன்றும் உறவினர்கள் தேடி திரிகின்றனர். இந்த விடயம் தொடர்பில் சர்வதேசமும் அவதானம் செலுத்தியுள்ள நிலையில் உரிய தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் முன் வரவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் தற்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைக்க சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது. இதில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றது. குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பாக சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பிற்கு சட்ட மூலம் உத்தரவாதம் அளிக்க வில்லை. மேலும் கொழும்பிற்கு இந்த அலுவலகம் மட்டுப்பட்டுள்ளது. அதே போன்று பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து கருத்துக்கள் உள்வாங்கவோ அங்கத்துவமோ வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அரசாங்கத்தின் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் நம்பக தன்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சர்வதேசத்தின் மத்தியஸ்தம் இன்றி எவ்விதமான விசாரணைகளை முன்னெடுத்தாலும் அது உண்மைக்கு முரணான தகவல்களையே வெளியிடும். எனவே சர்வதேச மத்தியஸ்தம் என்பது காணாமல் போனவர்கள் விவகாரத்தில் இன்றியமையாத ஒன்றாகும். போரில் கொல்லப்பட்டவர்கள், அநாதையாக்கப்பட்டவர்கள் மற்றும் விதவைகள் என பலர் பல்வேறு நெருக்கடி மிக்க நிலையில் உள்ளனர். ஆனால் அரசாங்கம் நல்லிணக்கம் என்று கூறுகின்றதே ஒழிய மக்களுக்கு ஒன்றும் செய்தபாடு இல்லை.

காணாமல் போனவர்கள் அலுவலக சட்டமூலத்தில் காணப்படும் விடயங்கள் குறித்தும் பல்வேறு திருப்திப்பட முடியாத நிலையே காணப்படுகின்றது. இதனை சர்வதேசம் உணர வேண்டும். 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் போரை வெற்றிக் கொண்ட போது அதற்கு ஐ நா வாழ்த்துக்களை தெரிவித்தது. ஆனால் காலப்போக்கில் இலங்கைகு எதிராக அமெரிக்க தலைமையில் போர் குற்றங்களை சுமத்தும் அளவிற்கு நிலைமை மாறியது. உலக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இலங்கை மீதான மென்மை போக்கிற்கு காரணமாக அமைந்தாலும் காலம் அதனை மாற்றிவிடும்.

உண்மைகளை நீண்ட நாட்களுக்கு மூடி மறைத்து விட முடியாது. சரணடைந்த எனது கணவரை நான் கேட்பது போன்று வடக்கு மற்றும் கிழக்கில் எத்தனையோ பேர் தமது உறவுகளை கேட்கின்றனர். இவர்களுக்கு பதில் கூறாது அலுவலகம் அமைக்கவும் சான்றிதழ் வழங்குவதும் ஏற்புடையதல்ல என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.

Related Posts