சென்னை நகரம் முதல் மழையால் பாதிக்கப்பட்ட போதை நடிகர் சித்தார்த் வட இந்திய ஊடகங்களை விமர்சித்தது ஒளரவிற்கு நிலைமையை அவர்களுக்கு புரிய வைத்தது என்றே தோன்றுகிறது. தற்போது இரண்டாவது முறையாக சென்னை கனமழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது தேசிய அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.
நடிகர் சித்தார்த் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களிடையே உதவிகளை செய்து வருகிறார் என்பதை ஊடகங்கள் மூலம் நம்மால் அறிந்திருக்க முடியும். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 கிராமங்களை சித்தார்த் நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த், “ வாழ்க்கையில் முதல் முறையாக வீட்டினை இழந்து நிலை குலைந்து போனேன். மூன்று ஸ்டுடியோக்கள், மூன்று கார்கள் .. அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளது.
ஒரே நாளில் அனைத்தையும் இழந்த நடுத்தர மக்களுக்காக மிகவும் வருந்துகிறேன். சமூக ஊடகங்களின் ஆக்கபூர்வமான பணியால், இயற்கை பேரிடர்களின் போது முதன்முறையாக பாதிக்கப்பட்டவர்களை விட உதவி கரங்களை நீட்டுபவர்கள் அதிகம் உள்ளனர். ” என்றார்.
மேலும் கடலூர் மாவட்ட நிலைமை குறித்து சித்தார்த் கூறுகையில்:- ”கடலூர் மாவட்டத்தில் நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் சமூக ஊடகங்கள் சொல்லிய அளவிற்கு மோசமில்லை. இந்த நேரத்தில் தேவைப்படுவது அதிகப்படியான உணவு பொருட்கள் அல்ல. அவை நெடுஞ்சாலைகளில் பேராசைக்காரர்களால் தட்டி பறிக்கப்படுகிறது. தேவையானவர்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட நாட்களாக பயன்படும் பொருட்கள் தற்போது தேவை.
வீடுகளை இழந்தோருக்கு, அதனை புரனமைக்க தேவைப்படும் பொருட்கள், போர்வை, பாய்கள், தற்காலிக தங்குமிடம் போன்றவை தேவை.” என்று தெரிவித்தார். இருப்பினும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு மீதான விமர்சனம் மற்றும் கமலஹாசன் கருத்தினால் ஏற்பட்ட சர்ச்சை உள்ளிட்டவை குறித்து சித்தார்த் நேரடியாக பதிலளிக்காமல், நிவாரணத்தில் கவனம் செலுத்தலாம் என்று கேட்டுக் கொண்டார்.