போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன்’ என்று விடுதலை புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளரும் வட மாகாணத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய தயா மாஸ்டர் தெரிவித்தார்.
யாழ்.சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘இந்த போரினால் பாதிக்கப்பட்டு பெருமளவானர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் இந்த போரினால் பல பெண்கள் விதவைகளாகியுள்ளனர். இவ்வாறானவர்களின் நல் வாழ்வுக்காகவே இந்த தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன்.
இவர்களுக்காக போராடுவதற்கு வடமாகாண சபையை ஒரு அபிவிருத்திக் களமாக பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட சம்மதம் தெரிவித்திருக்கின்றேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.