பாண் வழங்கலின் போது கோரோனா வைரஸ் பரவும் அபாயம்!

கோரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மிகக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுகள் விநியோகம் தொடர்பாக உரிய அக்கறை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு மட்டுமன்றி நாட்டின் சகல இடங்களிலும் பொதுமக்களின் அன்றாட உணவாக வெதுப்பக உற்பத்திகளான பாண், பணிஸ், கேக் போன்றன பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் அநேகமான குடும்பங்கள் காலை உணவாக பாண் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

வெதுப்பகங்களில் இருந்து பாண் துவிச்சக்கரவண்டிகளில் கட்டப்பட்ட பெரிய பெட்டிகளின் ஊடாகவே கடந்த காலங்களில் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு அதை பொதுமக்கள் பெற்றுக்கொண்ட போதிலும் தற்போது முச்சக்கரவண்டிகளில் நடமாடும் வியாபாரம் தொடங்கியிருக்கின்றது. எனினும், பாண் பெட்டிகள் இப்போதும் நடைமுறையில் உள்ளன.

பெட்டிகளிலோ முச்சக்கரவண்டிகளிலோ பாண் கொண்டு செல்பவர்கள் வெறும் கைகளாலேயே பாணை எடுத்து விநியோகிக்கின்றனர்.

கிராமங்களில் கடைகளுக்கு பாண் விநியோகிக்க செல்வோர் பெரும்பாலும் 05 அல்லது 10 இறாத்தல் பாண் வரை கைகளில் அடுக்கி நெஞ்சோடு அணைத்தவாறு அதை கடைகளுக்கு கொடுக்கின்றனர். முச்சக்கரவண்டிகளில் கொண்டுசெல்பவர்களும் இதே முறையையே பின்பற்றுகின்றனர்.

இவர்கள் இவ்வாறு பாணைக் கையாளும் போது இருமல், தடிமல், தும்மல் போன்றன ஏற்படும்போது தம்மை அறியாமலேயே அதை தீர்த்துவிடுகின்றனர். அத்துடன், இவர்களின் கைகள் வாகனத்தின் கைப்பிடி உட்பட பல இடங்களில் அடிக்கடி தொடுகையுறுகின்றன.

மேற்படி சந்தர்ப்பங்களில் கோரோனா வைரஸ் மட்டுமன்றி ஏனைய பல நோய்க்கிருமிகளும் பொதுமக்களை நேரடியாக தாக்கக்கூடிய அபாயம் உள்ளது.

ஒரு பாண் வெதுப்பகத்தில் உற்பத்தியாக்கப்பட்டு பொதுமக்கள் வாங்கி உட்கொள்வதற்கிடையே பலரது வெற்றுக் கைகளால் தொடுகையுறுகின்றது. தற்போதைய நிலையில் இது மிக ஆபத்தானது.

வெதுப்பகத்தில் இருந்து ஒவ்வொரு பாணும் பையில் அடைக்கப்பட்டு விநியோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆலயங்களில் கச்சான் விற்க பயன்படும் பைகளைப் போன்று மை தெளிக்கப்படாத கடதாசிப் பைகளில் பாண் அடைக்கப்பட முடியும். வெதுப்பக உரிமையாளர்களுக்கு சற்று சிரமம் இருக்கின்ற போதிலும் பொதுமக்கள் நலனுக்காக இதைச் செயற்படுத்த முன்வரவேண்டும்.

இந்த விடயத்தில் அக்கறை செலுத்துமாறு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மற்றும் அதிகாரிகளை சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நல்லதம்பி பொன்ராசா

Related Posts