யாழ்.மாவட்டத்திலுள்ள வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்படும் பாணின் நிறையில் கவனம் செலுத்துமாறு வெதுப்பக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்.மாவட்ட அதிகாரி தனசேகரம் வசந்தசேகரன் தெரிவித்தார்.
மல்லாகம் மற்றும் பருத்தித்துறை பகுதிகளிலுள்ள இரண்டு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட பாணின் நிறைகள் (அனுமதியளிக்கப்பட்ட பாணின் நிறை 400 கிராம்) குறைவாகக் காணப்பட்டமை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குறித்த இரு விற்பனை நிலையங்களுக்கும் எதிராக மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாணின் நிறை குறைவு சம்பந்தமாக யாழ்.மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்துடன் விரைவில் கலந்துரையாடவுள்ளோம். இவ்வாறு பாணின் நிறை குறைவாக தயாரித்து விற்பனை செய்யும் வெதுப்பகங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்.
அதேவேளை, யாழ்.மாவட்டத்திலுள்ள உணவகங்களில் உணவுகளின் விலையினை விலைப்பட்டியலில் காட்சிப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு காட்சிப்படுத்தாத உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.