பாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை – நோலிமிட் முகாமையாளர்

பாணந்துறையில் நேற்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

nolimit-2

இந்த சம்பவம் இடம்பெற்று சில மணி நேரத்துக்குள் மின்சார கசிவினாலேயே இந்த தீப்பரவல் இடம்பெற்றதாகக் காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறையின் இந்த அறிவிப்பானது அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே வெளியிடப்பட்டிருந்தது. எனினும் அங்கு மின்சார கசிவு ஏற்படாத வண்ணம் அதி நவீனமாக வடிவமைக்கப்பட்ட முறைமைகள் கையாளப்பட்டிருப்பதாக குறித்த முகாமையாளர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை குருணாகல் பகுதியில் வைத்து சிலர் நோலிமிட் ஆடை விற்பனை நிலையம் செல்லும் வாடிக்கையாளர்கள் மீது முட்டை வீச்சு தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பேஸ்புக்கில் சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. அத்துடன் நேற்று அதிகாலை 2.30 தொடக்கம் 3 மணி வரையான காலப்பகுதியில் நோலிமிட் அமைந்துள்ள இடத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அந்த நேரத்தில் சிலர் அந்த பிரதேசத்தில் இருந்து ஓடி மறைந்ததாகவும் குறைந்த பட்சம் மூன்று சாட்சிகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் இந்த சம்பவத்தின் பின்னணியில் நாசகார குழு ஒன்று செயற்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும் இதனை மறைத்து காவற்துறையினர் அடிப்படைவாதிகளை பாதுகாக்க முற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts