பட்டதாரியாகிவிட்டடால் ஏதோவொரு வேலைவாய்ப்பை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்திலேயே இன்று பலர் நுண்கலைப் பாடங்களை பயில்கின்றனர். ஆனால், அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பின்போதும் நுண்கலைப் பாடங்களை பயின்றவர்களில் பெரும்பாலானோருக்கு பாடத்துடன் தொடர்புடைய வேலைகள் கிடைக்கவில்லை என கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தெரிவித்தார்.
நல்லை க.கண்ணதாசனின் புதல்வனும் மாணவனுமாகிய இசைநிலவனது மிருதங்க அரங்கேற்றம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘இத்தகைய நிலைமைகளால் கலையை வளர்ப்பதற்கு அல்லது கலை சார்ந்த புதுமைகளைச் செய்வதற்கு நம்மவர்களுள் பெரும்பாலானோரால் முடியாது போகின்றது.
ஒவ்வொரு பிள்ளையும் ஏதோவொரு கலைக் கற்கையாவது பயில வேண்டும். இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நிலவுகின்ற போட்டித்தன்மை, க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஏற்படும் போட்டித்தன்மை என்பன இக்கலைக் கற்கைகளுக்கு தடையாக அமைகின்றன.
மிருதங்கம் பயின்றால் தங்கள் பிள்ளைகள் அரச பரீட்சையில் கோட்டைவிட்டு விடுவார்கள் என பெற்றோர் நினைக்கின்றார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. கலைத்திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்கள்தான் கல்வியிலும் பிரகாசிக்கின்றார்கள். அத்துடன் அரங்க ஆற்றுகைக் கலைகளை கற்பது, சமநிலை ஆளுமை வெளிப்பாட்டிற்கான ஆதாரமாகவும் அமைகின்றது.
குரு – சிஷ்ய முறைமையை இன்றும் உயிர்ப்புடன் பேணுகின்ற நிலைமையையும் கலைக் கற்கைகளிலேயே காண முடிகின்றது’ என்றார்.
யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 10 இல் பயிலும் இசைநிலவனின் அரங்கேற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் வண என்.ஜே.ஞானப்பொன்ராஜாவும் சிறப்பு விருந்தினர்களாக சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அதிபர் துஷ்யந்தி துஷப்கரன், தண்ணுமை வேந்தன் மா.சிதம்பரநாதன், கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
இந்த அரங்கேற்ற நிகழ்வில் இடம்பெற்ற இசையரங்கில் பக்கவாத்தியங்களாக தவநாதன் றெபேட் பாட்டு, எஸ்.கோபிதாஸ் வயலின், இசைநிலவன் மிருதங்கம், நா.சிவசுந்தரசர்மா கெஞ்சிரா, என். சதீஸ்குமார் முகர்சிங்கை, கஞானவேல் வசந் கடம், க.ரஜீவன் தம்புரா ஆகியோர் கலந்து கொண்டனர்.