பாடசாலைமட்ட, கோட்ட மட்ட, வலய மட்ட, மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது பிரதம விருந்தினர்களாக அழைக்கப்படுவோர் குறித்துத் தீர்மானித்த பின்னர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் அதற்குரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள நீண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மாணவர்களின் கல்வி, விளையாட்டு நடவடிக்கைளில் பாடசாலை வளர்ச்சியில் அக்கறைகொண்டவர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட முடியும். விருந்தினர்களைத் தீர்மானித்த பின்னர் முறையான முன் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.’
விளையாட்டுப் போட்டியில் கட்டாயம் இலங்கையின் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்பதுடன் அது பிரதம விருந்தினரால் ஏற்றப்பட வேண்டும். தேசியக் கொடி ஏற்றப்படும் கம்பம், ஏனைய கொடிக் கம்பங்களை விட உயர்வாக இருத்தல் வேண்டும். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும்.
பாடசாலை, கோட்டம், வலய மட்டப் போட்டிகளில் தேவைக்கேற்ப மாகாணக் கொடி ஏற்ற முடியும். வலயப் போட்டிகளில் வலயக் கொடி அவசியம் ஏற்றப்படல் வேண்டும். பாடசாலை, கோட்ட போட்டிகளில் தேவைக்கேற்ற வலயக்கொடி ஏற்ற முடியும்.
கோட்ட மட்டப் போட்டிகளில் கோட்டக் கொடி அவசியம் ஏற்றப்படல் வேண்டும். பாடசாலை, வலயப் போட்டிகளில் தேவைக்கேற்ப கோட்டக் கொடி ஏற்ற முடியும்.
கொடியேற்றம் முடிந்த பின்னரே அணிநடை ஆரம்பிக்கப்பட வேண்டும். பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் போது இல்ல அணிகள் பங்குபற்றுதல் வேண்டும்.
ஏனைய மட்ட விளையாட்டுக்களின் போது பாடசாலை, கோட்ட, வலய அணிகள் பங்குபற்றுதல் வேண்டும். வழமை போன்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படலாம்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் ஏற்கனவே பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள ஒலிம்பிக் சத்தியப்பிரமாணத்தை தாய்மொழியில் எடுத்தல் வேண்டும். போட்டியில் கடமையாற்றும் நடுவர்கள், உதவியாளர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்தல் வேண்டும்.
பிரதம விருந்தினர் விளையாட்டுப் போட்டியை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தல், அணிநடை கலைந்து செல்லுதல், விளையாட்டுப் போட்டிகள் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடத்தப்பட வேண்டும்.
விளையாட்டுப் போட்டியின் முடிவில் பாடசாலைக்கொடி, கோட்டக்கொடி, வலயக்கொடி, மாகாணக்கொடி, தேசியக்கொடி எனும் ஒழுங் கில் இறக்கப்படுதல் வேண்டும்.
விளையாட்டுப் போட்டி மாலை 6 மணிக்கு முன்பாக முடிக்கப்பட வேண்டும். அத்துடன் இடைவேளை உடற்பயிற்சி நிகழ்ச்சியின் போது மேலைத்தேய இசை மற்றும் சினிமா மெட்டிலான பாடல்கள், இசை, நடனங்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
மாணவர்கள் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளை நடத்துதல் வேண்டும். கூடிய அளவு விளையாட்டுக்களும் சேர்ந்த உடற்பயிற்சி நிகழ்வுகளாக அமைவது விரும்பத்தக்கது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.