பாடசாலை மாணவர்கள் தினமும் 6 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக்கவசம் அணிவது கட்டாயமானதா என அனில் ஜாசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையில் அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்குச் செல்லும்போதும் வெளியேறும்போதும் முகக்கவசம் அணிவதில் சிக்கல் இல்லை என தெரிவித்துள்ள அவர், பாடசாலை மாணவர்கள் 6 மணித்தியாலங்கள் பாடசாலை நேரத்திற்குள் தினசரி முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்த பின்னர் தங்கள் முகக் கவசத்தை நீக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.