பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம்,கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

இவர்களுக்கும், பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீற்றர் இடைவெளி காணப்படுகிறது இவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ -9 வீதியூடாக பல போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும் இந்த பாடசாலை மாணவர்களுக்கான சேவையை வழங்குவதில் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் சரியாக செயற்படவில்லை என மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

மாணவர்கள் வீதியில் நிற்று பேருந்தை மறிக்கும் போதும் அவர்களை ஏற்றாது செல்கின்ற அரச மற்றும் தனியார் பேருந்துகளால் மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லவும் பாடசாலையிலிருந்து மீண்டும் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவும் முடியாத நிலைமையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கு தெரியப்படுத்தியும் ஊடகங்களில் பல்வேறு தடவைகள் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டும் இதுவரை இந்த பிரச்சனை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே காணப்படுகிறது குறிப்பாக மாணவர்கள் மாத்திரமன்றி குறித்த கிராமங்களில் இருந்து மாங்குளம் நகரத்திற்கு செல்கின்ற பொதுமக்கள் வயோதிபர்கள் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பேருந்துகள் ஏற்றிச் செல்லாத காரணத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் காலை 6:45 முதல் 8 மணி வரை வீதியில் நின்று கூட எட்டு மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு செல்ல முடியாமல் அங்கலாய்த்து வருகின்றனர் இவ்வாறான நிலையில் இன்று காலையும் கூட 6.45 மணி முதல் 8 15 மணி வரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரச பேருந்துகள் குறித்த பகுதி ஊடாக சென்ற போதும் மாணவர்கள் மறித்த போதும் எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை என மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இறுதியாக விசுவமடு வவுனியா வழித்தடத்தில் பணிபுரியும் தனியார் பேருந்து ஒன்று எட்டு இருபது மணியளவில் குறித்த மாணவர்களை குறித்த இடத்திலிருந்து பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளது எனவே இவ்வாறு தொடர்ச்சியான பேருந்து சேவையின்மையால் பொதுமக்கள் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல்வேறு இடங்களிலும் பேருந்து சேவைகள் இல்லாமையால் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்ற போதும் இந்த வீதியில் அதிகளவான பேருந்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும் இந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லலாமையானது பொதுமக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொது மக்கள் இவ்வாறு தொடர்ச்சியாக பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாது மாணவர்களை ஏற்றும் பேருந்தின் நடத்துனர்கள் சாரதிகள் ஏற்றிவிட்டு அவர்களை ஏசுவதாகவும் இவ்வாறான பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலை சென்று வீடு திரும்பி வர முடியாத நிலையில் காணப்படுவதாகவும் எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த வீதியில் இடம் பெறுகின்ற பேருந்து சேவைகள் அனைத்திலும் மாணவர்கள் இலகுவாக பாடசாலைக்கு சென்று வரக்கூடிய வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

இந்த கிழமைக்குள் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் அடுத்த வாரம் ஏ-9 வீதியை பனிக்கன்குளம் பகுதியிலே மறித்து எந்த ஒரு வாகனத்தையும் செல்ல விடாது தடுத்து பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts