பாடசாலை மாணவர்களுக்குப் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், அவர்களின் காதுகளில், ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை மருத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் சந்த்ரா ஜயசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில், கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்
, “ஒருவரின் காதில், இன்னொருவர் அடிக்கும் போது, செவிப்பறை கிழிவடையும். காதைத் தூயதாக்கும் பருத்தியின் பயன்பாட்டாலும் அதிகளவிலான சத்தத்தினாலும், செவிப்பறை சேதமடையும்” எனவும் தெரிவித்த அவர், “ஆசிரியர்களின் தாக்குதலுக்குள்ளான மாணவர்களில் பலர், காதுப் பிரச்சினையால், வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்” என்றும் கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“அலைபேசிகளைப் பயன்படுத்தி, காணொளிகளைப் பயன்படுத்துவதன் காரணமாக, ஒற்றைத் தலைவலி அதிகரிக்குமென்றார். அலைபேசிகளில் காணொளிகளைப் பார்வையிட்ட பின்னர், பலரும் சிகிச்சைகளைப் பெறுகின்றனர்” எனவும் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள பிரதான அரச வைத்தியசாலைகளிலுள்ள காது, மூக்கு, தொண்டைச் சத்திரசிகிச்சை நிபுணர்கள் 50 பேரின் சேவைகளை, பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென, காது, மூக்கு, தொண்டைச் சத்திரசிகிச்சை நிபுணரான டொக்டர் ஆர்.பி.தயாசேன, இவ்வூடக மாநாட்டின் போது தெரிவித்தார்.
செவிப்புலன் சம்பந்தமான பிரச்சினைகளைக் கொண்டவர்கள், பிரதான வைத்தியசாலைகளின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவுகளுக்கு விஜயம் செய்வதன் மூலம், கேட்டல்திறனை அதிகரித்துக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
உலகிலுள்ள 330 மில்லியன் பேர், செவிப்புலன் பிரச்சினைகளால் அவதியுறுகின்றனர் எனத் தெரிவித்த அவர், அவர்களில் பாதிக்கும் அதிகமானோர், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வசிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.