பாடசாலை மாணவர்களிடையே இரகசியமாக இடம்பெறும் மோசமான செயல்!! விழிப்புடன் செயற்படுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மாணவர்கள் வீட்டில் பணம் கேட்டால் கவனமாக இருக்குமாறும், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்த நேரமும் விழிப்புடன் செயற்படுமாறும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் ஷாக்ய நானாயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மாணவர்களின் உடல் மாற்றங்கள் தொடர்பில் பெற்றோர் தினமும் அவதானிக்க வேண்டும்.போதைப்பொருள் பாவனையினால் மாணவர்களின் உடலில் உடனே மாற்றங்கள் ஏற்படாது.சிறிது காலம் செல்லும்,தங்களது பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் கைகளிலேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இரும்பு,தகரங்களை சேர்த்துக்கொண்டு நகரிற்குள் வரும் வாகனங்களில் இரகசியமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 14 மற்றும் 16 வயதுடைய மாணவிகள், ஐஸ் போதைப்பொருள் பாவனையினால் தங்களுக்கு நேர்ந்த மாற்றங்களையும்,தாம் ஐஸ் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் விதம் தொடர்பிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி தெரிவிக்கையில்,

நிகழ்வொன்றிற்கு சென்ற போது எனது நண்பர்கள் என்னை போதைப்பொருளை பாவிக்குமாறு தெரிவித்தனர்.பின்னர் நான் அதனை செய்து பார்த்தேன்.எனக்கு தனி உலகமாக தெரிந்தது. பின்னர் தொடர்ந்தும் பாவித்தேன்.

நாங்கள் பாடசாலைக்கு செல்லும் போதும், முடிந்து வெளியே வந்தவுடனும் பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தினமும் கொண்டு வந்து தருவார்கள்.இதனை எங்களால் நிறுத்த முடியவில்லை. இந்த சமூகத்தில் நிறுத்த நினைத்தாலும் கடினம்.

இந்த பழக்கத்தினால் கல்வி கற்க முடியவில்லை.பசி, தூக்கம்,எதுவுமில்லை. சில காலம் சென்றதும் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுகின்றது.எதுவுமே செய்ய முடியவில்லை.வேலை,படிப்பு எதுவுமே ஞாபகத்தில் இல்லை.

14 வயதிற்கும் மேற்பட்டவர்களே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.இந்த பழக்கம் இந்தளவு பாதிப்பினை ஏற்படுத்தும் என நாங்கள் நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே பாதிக்கப்பட்ட மாணவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ள போாதிலும், போதைப்பொருள் பாவனை உலகில் மனித சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளதுடன், இது மனித ஆரோக்கியத்திற்கு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள் பக்கவாதம் அல்லது மாரடைப்பு மற்றும் இதயம் நோய்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ் மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, நபர் எதிர்பார்ப்பதை விடவும் அதிகமாக, உடல் அரிப்பு, வறண்ட வாய், அதிக வியர்வை, விரைவான இதயத் துடிப்பு மற்றும் விரைவான சுவாசம் மற்றும் பசியின்மை ஏற்படலாம்.பக்கவாதம் அல்லது மாரடைப்புக்குள்ளாகலாம், மயக்கமடைந்து அல்லது இறக்கலாம் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உள ரீதியான மாற்றத்தின் ஊடாகவே ஹெரோயின் அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக குணமடைய முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதுடன்,மாணவர்களின் அறிவையும் திறமையையும் எதிர்காலத்தையும் அழித்துவிடும்.

எனவே இத்தகைய பாதிப்பிலிருந்து மாணவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கும்,சமூகத்திற்கும் உரிய கடமையாகும்.

Related Posts