கிளிநொச்சி மதிய ஆரம்ப பாடசாலைக்கு உரிய காணியை ஆக்கிரமித்தும் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எதுவித பலனுமில்லை என்னும் செய்தி ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதுமாகும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
25 வருடங்களாக வாழ்வாதார சுயதொழிலாக வெதுப்பாக உற்பத்தி நிலையத்தை மேற்கொண்டு வருவதோடு, 15க்கும் மேற்பட்டோர் இவ் வெதுப்பக உற்பத்தியை நம்பி தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் மாற்றிடம் வழங்கப்பட வேண்டும். வழங்கும் பட்சத்தில் பொது நலன்கருதி கோரப்படும் காணியை வழங்கலாம் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக உற்பத்தி நிலையதிற்கான மின்சார கட்டணம், சுகாதார, கட்டிட அனுமதி , மற்றும் சுற்று சூழல் ஆகிய அனுமதிகளும் பிரதேச செயலக அனுமதிகளுடன் நடாத்தி வந்த ஆவணங்களும் ஆதாரமானவையாக உள்ளதாகவும் அவை அரச செயலகங்களிலும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது கரைச்சி பிரதேச மக்களுக்கு சமூக பணிகளை மேற்கொண்டு வருவதோடு, அதன் பயனாக தேசிய ரீதியான எனது அரசியல் பயணப்பாதையில் தடைகளை ஏற்படுத்தும் வகையில் மக்களினால் தீண்டத்தகாதவர்களாகவும், துரோகிகளாகவும் முத்திரை குத்தப்பட்டவர்களினால் பொய்யான தகவல்கள் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலையின் அபிவிருத்தி குழுவினால் பொதுபாவனைக்காக காணி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து பிரதேச செயலாளரின் அனுமதியுடன் பெற்று கொடுக்குமாறு இணைத்தலைமையினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் நிமித்தம் கனகாம்பிகை குளம் சிவனாலய பகுதியில் 2 பரப்பு அரச காணி இனம்காணப்பட்டு காணி உதியோகத்தரினாலும் பார்வையிடப்பட்டு கரைச்சி பிரதேச செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அதன் பின்னர் பெறுமதி கூடிய காணியாக இருப்பதை காரணம் காட்டி கரைச்சி பிரதேச செயலாளரினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை பெற்று தரப்படவில்லை. எனவும் சுய தொழிலுக்கும் ,நேர்மையான அரசியலுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான ஆதாரங்கள் எதுவும் அற்ற செய்திகளை வெளியிடுவதாக கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.