ரன்தம்பே பயிற்சி முகாமில் கேணல் தர தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட ரன்தோளுகம பஞ்ஞானந்த தேசிய பாடசாலையின் அதிபர் டபிள்யூ.ஏ.எஸ் விக்ரமசிங்க உயிரிழந்துள்ளார். இவர் ஞாயிறு காலை உயிரிழந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்த போதிலும், இச்சம்பவம் பாடசாலையில் இடம்பெறவில்லை எனவும் கேணல் பயிற்சியின் போதே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பாடசாலைகளிலும் உள்ள அதிபர்கள் 40 தொடக்கம் 50 வயதானவர்கள் எனவும் இவர்கள் கேணல் பயிற்சிக்கு எந்தவொரு உடற் தகுதியும் இல்லாத நிலையில் பயிற்சியில் இணைத்துக் கொள்வதே இவ்வாறான நிலைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இன்னும் பல காலம் பாடசாலைக்கு பெரும் சேவையாற்றக் கூடிய, நாட்டின் பெறுமதி மிக்க அதிபர் ஒருவரை இப் பயிற்சி காரணமாக இழந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கூறினார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் ரன்தம்பே பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக சென்ற 52 வயதான குறித்த அதிபர் ஞாயிறு காலை விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சிக்கு தயாரான நிலையில் சுகவீனமுற்று அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.