கிளிநொச்சியில் பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றுக்குள் ஆபத்தான ஓட்டை காணப்படுகின்றது. இந்த குறுந்தூர சேவை பேருந்து பாடசாலை நேரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளையும் ஏற்றிச் செல்கிறது. உடனடியாக இந்தப் பேருந்தை சேவையிலிருந்து நீக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பயணிகள் சுட்டிக்காட்டியபோதும், தொடர்ந்தும் குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. காலை வேளையில் பாடசாலை மாணவர்களை நிறைந்துக் கொண்டு செல்லும் இந்த பேருந்தினில் மாணவர்கள் கால்களை விட்டால் என்ன நிலமை? என்றும் பயணிகள் கேள்வி எழுப்பினர்.
கிளிநொச்சி பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துனர்களின் அணுகுமுறை குறித்து பல குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி பயணிகளை பெரும் அசௌகரியப்படுத்துவதாகவும் இந்த விடயத்தில் கட்டுப்பாடு தேவை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை வீதியின் எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த பேருந்துகள், நிறுத்தத்தில் பயணிகளை இறக்காமல், புதிய பயணிகளை ஏற்றும் இடங்களில் நிறுத்தி மக்களை அசளகரியப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓட்டையுடன் ஓடும் பேருந்து குறித்தும் பயணிகள் கடும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.