தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 11 கிளிநொச்சி மாணவர்களில் 8 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் விடுவித்தார்.
கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில், இவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குறித்த மாணவர்களின் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் உத்தரவிட்டார். 8 மாணவர்களுடைய பெற்றோர்கள் மாத்திரமே ஆஜரானதையடுத்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அறிவுரை வழங்கி குறித்த மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர் ஆஜராகாத மாணவர்கள் மூவரையும் அவர்களது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் காவலில் வைக்கப்பட வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.