வடக்கு மாகாண பாடசாலைகள் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு பொதுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(புதன்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“வடக்கு மாகாணத்தில் 339 தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. இதில் யாழ். மாவட்டத்தின் நகரப் பகுதியில் 84 தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன. ஏனைய பகுதியில் 290 தனியார் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.
இதில் எந்தொரு கல்வி நிலையத்தின் இயக்குநரும் பதிவு செய்யவில்லை. அவர்கள் பதிவுசெய்தாலே கல்வி நிலையங்களுக்குப் பாதுகாப்பினை வழங்கமுடியும்.
பொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஊடாக கல்வி நிலையத்திற்கான பாதுகாப்பினை கொடுக்கமுடியும். அதுவும் காலத்தின் தேவையாக இருக்கின்றது.
வட. மாகாணத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். பாடசாலை சமூகம் இராணுவமயமற்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியதால், பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் சாரணர்களை உள்ளடக்கிய சிவில் விழிப்புக் குழுக்கள் விழிப்புடன் செயற்படும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக எந்தவொரு ஆசிரியரும் தமக்கு மேலதிக பாதுகாப்பு வேண்டும் எனக் கோரினால் அதனை கருத்தில் எடுத்து பாதுகாப்பு வழங்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.